

2019 உலகக் கோப்பை அணிக்கான இந்திய அணியில் அம்பட்டி ராயுடு இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்ட நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நிஜமாகவே அம்பட்டி ராயுடுக்காக வருந்துகிறேன். நூலிழையில் வாய்ப்பை இழந்தார். 2016 ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்குப் பிறகு அவர் டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்படவேண்டும் என தேர்வுக்குழு விரும்பியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏன் ஆர்வம் செலுத்துவதில்லை என அவரிடம் நான் கேட்டுள்ளேன். ஐபிஎல்-லில் நன்றாக விளையாடியதால் ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்தோம். என்.சி.ஏ.வில் அவருடைய உடற்தகுதிக்காக ஒரு மாதம் செலவு செய்தோம். நாங்கள் எண்ணியதை அவரால் ஓரளவு நிறைவேற்ற முடிந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் அவருக்கு ஏற்பட்டதை எண்ணி நானும் கவலைப்பட்டேன். அவருடன் இணைந்து விளையாடியுள்ள நான், அவருடைய நிலை குறித்து வருந்தினேன் என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத கோபத்தில் கடந்த வருட ஜூலை மாதம் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் அம்பட்டி ராயுடு. பிறகு மனம் மாறி, தன்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.