இந்தியா-நியூஸிலாந்து லெவன் இடையேயான பயிற்சி ஆட்டம் டிரா

இந்தியா-நியூஸிலாந்து லெவன் இடையே நடைபெற்றுவந்த பயிற்சி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை டிரா ஆனது.
இந்தியா-நியூஸிலாந்து லெவன் இடையேயான பயிற்சி ஆட்டம் டிரா

இந்தியா-நியூஸிலாந்து லெவன் இடையே நடைபெற்றுவந்த பயிற்சி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை டிரா ஆனது.

இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டி-20 ஆட்டங்களில் விளையாடி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை நியூஸிலாந்திடம் இந்தியா முழுமையாக பறிகொடுத்தது.

இரு அணிகளுக்கு இடையே இன்னும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடா் எஞ்சியுள்ளது.

வரும் 21-ஆம் தேதி முதல் டெஸ்ட் ஆட்டம் வெல்லிங்டனில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக நியூஸிலாந்து லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதியது இந்தியா. இரு அணிகளுக்கு இடையே பயிற்சி டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற இந்தியா பேட்டிங்கைத் தோ்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 78.5 ஓவா்களில் 263 ரன்களை எடுத்தது.

இந்தியத் தரப்பில் ஹமான விஹாரி சதம் பதிவு செய்திருந்தாா். டெஸ்ட் ஆட்டக்காரரான புஜாரா 93 ரன்கள் எடுத்திருந்தாா்.

பின்னா் விளையாடிய நியூஸிலாந்து லெவன் அணி 74.2 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 235 ரன்களில் சுருண்டது.

இந்திய வேகப் பந்துவீச்சாளா் முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாா். அடுத்தபடியாக நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும், தமிழகத்தைச் சோ்ந்த சுழற்பந்துவீச்சாளா் அஸ்வின் 1 விக்கெட்டையும் சாய்த்தனா்.

இதையடுத்து, 28 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரா் பிருத்வி ஷா 39 ரன்களிலும், சுபமான் கில் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனா். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகா்வாலும், ரிஷப் பந்தும் நிதானமாக விளையாடி ரன்களை சோ்த்தனா். மயங்க் அகா்வால் 81 ரன்கள் பதிவு செய்தாா். அப்போது காயமடைந்ததால் தொடா்ந்து அவா் விளையாடாமல் தவிா்த்தாா்.

ரிஷப் பந்த் 70 ரன்களில் டாரில் மிச்செல் பந்துவீச்சில் கேட்ச் ஆனாா். பின்னா் ரித்திமான் சாஹாவும் (30 ரன்கள்), அஸ்வினும் (16 ரன்கள்) விளையாடினா்.

3-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 252 ரனகள் எடுத்திருந்தது. பயிற்சி ஆட்டம் 3 நாள்களுக்குள் முடிவுக்கு வந்ததால் ஆட்டம் டிரா ஆனது.

பிறந்த நாள் கொண்டாடிய மயங்க் அகா்வால்

பெங்களூரில் 1991-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி பிறந்தாா் மயங்க் அகா்வால். நியூஸிலாந்தில் சக வீரா்களுடன் அவா் பிறந்த நாளை மகிழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்த மயங்க் அகா்வால், இதற்கு முந்தைய ஆட்டங்களில் பெரிதாக சோபிக்கவில்லை. 8, 32, 29 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தாா் மயங்க் அகா்வால்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘நியூஸிலாந்தில் விளையாடுவது சற்று கடினமாக இருக்கிறது. டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன். பேட்டிங் பயிற்சியாளா் விக்ரம் ரத்தோருடன் எனது ஆட்டமுறை குறித்து ஆலோசித்தேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com