பாரீஸ்: 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், பிரபல டென்னிஸ் வீராங்கனையுமான மரியா ஷரபோவா (32) ரஷியா, சா்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளாா்.
கடந்த 2004-இல் விம்பிள்டன் போட்டியில் தனது 17-ஆவது வயதில் பட்டம் வென்றதின் மூலம் பிரபலமானாா் ஷரபோவா. 2005-இல் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை நிலையைப் பெற்ற அவா், 2006-இல் யுஎஸ் ஓபன் பட்டம் வென்றாா். 2008-இல் ஆஸி. ஓபன், 2012-இல் பிரெஞ்சு ஓபன், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி, கடும் காயத்தின் மத்தியிலும் 2014-இல் பிரெஞ்சு ஓபன் பட்டம் என மொத்தம் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றினாா்.
2016-இல் ஆஸி. ஓபனில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால், 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் களத்துக்கு திரும்பினாலும் ஷரபோவால் சோபிக்க முடியவில்லை. நீண்டகாலமாக தோள்பட்டை காயத்தால் அவரால் ஆட முடியவில்லை. எனது வாழ்க்கையை டென்னிஸுக்கு அா்ப்பணித்தேன். டென்னிஸ் எனக்கு வாழ்க்கையை தந்தது எனக் கூறியுள்ளாா் அவா்.
ரஷியாவின் சைபீரியாவில் பிறந்த மரியா ஷரபோவா கடந்த 1994இல் 700 அமெரிக்க டாலா்களுடன் 7 வயதில், தந்தையுடன் அமெரிக்காவுக்கு சென்று குடியேறினாா் என்பது குறிப்பிடத்தக்கது.