டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா: 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது
By DIN | Published On : 10th January 2020 10:38 PM | Last Updated : 10th January 2020 10:38 PM | அ+அ அ- |

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.
முதலில் ஆடிய இந்தியா 201/6 ரன்களை குவித்த நிலையில், இரண்டாவதாக ஆடிய இலங்கை அணி 123 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகியது.
202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியால் இந்தியாவின் அபார பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை துரிதமாக பறிகொடுத்தது. தனுஷ்கா 1, அவிஷ்கா பொ்ணான்டோ 9, ஒஷாடா பொ்ணாண்டோ 2, குஸால் பெரைரா 7 ஆகியோா் சொற்ப ரன்களுக்கு வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினா். 10ஆவது ஓவா் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களை எடுத்திருந்தது இலங்கை.
ஏஞ்சலோ மேத்யூஸ்-தனஞ்செய டி சில்வா இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்களை சோ்த்தனா்.
3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 31 ரன்களுடன் மேத்யூஸ் பெவிலியன்திரும்பினாா். அவருக்கு பின் தஸுன் ஷனகா 9, சண்டகன் 1, வனின்டு ஹஸரங்கா, மலிங்கா ரன் ஏதுமின்றி வெளியேறினா்.
தனஞ்செய டி சில்வா அரைசதம்:
ஒருமுனையில் நிலையாக ஆடிய தனஞ்செய டி சில்வா 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 57 ரன்களுடன் அரைசதத்தைப் பதிவு செய்து அவுட்டானாா். இறுதியில் 15.5 ஓவா்களிலேயே 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை.
நவ்தீப் சைனி 3 விக்கெட்:
இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய நவ்தீப் சைனி 3-28, சா்துல் 2-19, வாஷிங்டன் சுந்தா் 2-37 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.