நான்கு நாள் டெஸ்ட் என்பது முட்டாள்தனம்: ரவி சாஸ்திரி காட்டம்

நான்கு நாள் டெஸ்டுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்...
நான்கு நாள் டெஸ்ட் என்பது முட்டாள்தனம்: ரவி சாஸ்திரி காட்டம்

பல டெஸ்ட் ஆட்டங்கள் நான்கு நாள்களுக்குள் முடிந்துவிடுவதால் ஐந்து நாள்களுக்கு நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை நான்கு நாள்களாகச் சுருக்க ஐசிசி யோசனை செய்து வருகிறது. 2023 முதல் தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து நான்கு நாள் டெஸ்டைக் கட்டாய நடைமுறைக்குக் கொண்டுவர ஐசிசி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நான்கு நாள் டெஸ்டுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

நான்கு நாள் டெஸ்ட் என்பது முட்டாள்தனம். இது இப்படியே போனால் ஒருநாள், டி20 போல இத்தனை ஓவர்கள் தான் வீசவேண்டும் என்பது போல டெஸ்ட் கிரிக்கெட் மாறிவிடும். ஐந்து நாள் டெஸ்டை மாற்ற வேண்டியதில்லை. அப்படியும் மாற்ற விரும்பினால் முதல் ஆறு அணிகள் ஐந்து நாள் டெஸ்டுகளிலும் கடைசி நான்கு அணிகள் நான்கு நாள் டெஸ்டுகளிலும் விளையாடலாம். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால் முதல் ஆறு இடங்களில் உள்ள அணிகள் அடிக்கடி டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவேண்டும். கிரிக்கெட்டைப் பிரபலமாக்க ஒருநாள், டி20 கிரிக்கெட்டுகள் உள்ளன.

பகலிரவு டெஸ்டுகள் இன்னும் சோதனைக்கட்டத்தில் உள்ளன. இளஞ்சிவப்பு பந்துகள் சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இல்லை. எனவே சரியான பந்துகளைப் பயன்படுத்தவேண்டும். பகலில் முழு டெஸ்டாகவும் இரவில் பாதி டெஸ்டாகவும் உள்ளது. முதல் ஆறு இடங்களில் உள்ள அணிகள் அடிக்கடி விளையாடினால் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்த முடியும் என்றார். 

2018 முதல் 60 சதவிகித டெஸ்ட் ஆட்டங்கள் நான்கு நாள்களுக்குள் முடிந்துவிடுவதால் இந்தப் புதிய நடைமுறையைக் கட்டாயமாக்க ஐசிசி தீவிரமாக யோசித்து வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரு நான்கு நாள் டெஸ்ட் ஆட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே, இங்கிலாந்து - அயர்லாந்து. அடுத்த வருடம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா நான்கு நாள் டெஸ்டில் விளையாடவுள்ளது. இதனால் நான்கு நாள் டெஸ்ட் கட்டாயமாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்த செய்தி வெளியானது முதல் ஐசிசியின் புதிய திட்டத்துக்கு பல்வேறு வகையான விமரிசனங்கள் வெளிவந்துள்ளன. கிரிக்கெட் நிர்வாகிகள் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் வீரர்கள் மட்டும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.

துபையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் குழுவில் நான்கு நாள் டெஸ்ட் குறித்து ஆலோசனை நடைபெறும் என அக்குழுவின் தலைவர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நானும் அந்தக் குழுவில் ஒருவன் என்பதால் நான்கு நாள் டெஸ்ட் குறித்த என்னுடைய கருத்தை இப்போது கூற முடியாது. அந்தக் கூட்டத்தில் நான்கு நாள் டெஸ்ட் குறித்து விவாதித்து பிறகு உங்களிடம் தெரிவிப்போம் என்றார். ஐசிசி கிரிக்கெட் குழுவில் ஆண்ட்ரூ ஸ்ராஸ், ராகுல் டிராவிட், மஹேலா ஜெயவர்தனே, ஷான் பொல்லாக் ஆகிய வீரர்கள் உள்ளார்கள். 

நான்கு நாள் டெஸ்ட் குறித்த யோசனைக்கு விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நான்கு நாள் டெஸ்ட் குறித்துக் கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மையை மாற்றக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டை வணிகமாக்கும் பொருட்டு, பகலிரவு டெஸ்டுகள் நடக்கின்றன. அது ரசிகர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது. அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் மாற்றிவிடக்கூடாது. அதில் எனக்கு நம்பிக்கையில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மாற்றம் கொண்டு வரலாம் என்றால் பகலிரவு டெஸ்டுகளை நடத்துவதுதான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com