அதிக சிக்ஸர்கள்: கிறிஸ் கெயிலைப் பின்னுக்குத் தள்ளிய ரோஹித் சர்மா!
By எழில் | Published On : 20th January 2020 03:26 PM | Last Updated : 20th January 2020 03:26 PM | அ+அ அ- |

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்றது. இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வென்ற நிலையில், இறுதி ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இறுதி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி.யை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்திய அணி. முதலில் ஆடிய ஆஸி. அணி ஸ்மித்தின் அற்புத சதத்தால் (131) 286/9 ரன்களைக் குவித்தது. 47.3 ஓவா்களிலேயே 289/3 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. 6 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 128 பந்துகளில் 119 ரன்களை விளாசினார் ரோஹித் சர்மா. கோலி 89 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆறு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் ரோஹித் சர்மா. இதன் மூலம் சிக்ஸர் அடிப்பதில் கிறிஸ் கெயிலுக்குத் தான் நிகரானவன் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். மேலும், 2007 ஜுன் முதல் கணக்கெடுத்துப் பார்க்கும்போது, கெய்லை விடவும் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா.
ஒருநாள் கிரிக்கெட்டில் 301 ஆட்டங்களில் விளையாடி, 331 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார் கெயில். முதல் இடத்தில் 398 ஆட்டங்களில் 351 சிக்ஸர்களுடன் அஃப்ரிடி உள்ளார். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு 4-ம் இடம். 224 ஆட்டங்களில் 244 சிக்ஸர்கள்.
அதேபோல சர்வதேச கிரிக்கெட்டில், டெஸ்ட், ஒருநாள், டி20 என எல்லாமும் சேர்த்து 530 ஆட்டங்களில் 534 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார் கெயில். 476 சிக்ஸர்களுடன் 2-ம் இடத்தில் அஃப்ரிடி. மூன்றாவது இடத்தில் 360 ஆட்டங்களில் 416 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா உள்ளார்.
இந்த இரண்டுப் பட்டியல்களிலும் கெயில், ரோஹித் சர்மாவை விடவும் அதிக ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனவே இரண்டிலும் ரோஹித்தைத் தாண்டிவிட்டார். ஆனால் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை கணக்கெடுத்துப் பார்த்தால் கெயிலைத் தாண்டியுள்ளார் ரோஹித் சர்மா.
2007, ஜுன் 23 அன்று சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ரோஹித் சர்மா. அன்று முதல் இன்றுவரை அதிக சிக்ஸர்கள் பட்டியலைப் பார்க்கலாம்.
2007, ஜுன் 23 முதல் இன்றுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா - 244
கிறிஸ் கெயில் - 242
2007, ஜுன் 23 முதல் இன்றுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா - 416
கெயில் - 413
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...