முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் இடம்பெறவில்லை.
முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மையர், கீமோ பால் ஆகிய மூன்று வீரர்களும் இடம்பெறவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்குச் செல்ல அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக 25 மே.இ. தீவுகள் வீரர்களும் 11 நிர்வாகிகளும் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்கள். அனைத்து வீரர்கள், நிர்வாகிகளுக்கும் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் கரோனா டெஸ்ட் பரிசோதனை நடைபெற்றது. அனைவரின் முடிவுகளும் நெகடிவ் என வந்துள்ளது. லண்டனில் வசிக்கும் மே.இ. தீவுகள் பயிற்சியாளர் பில் சிமன்ஸ், அணியினருடன் இணைந்துகொண்டுள்ளார். அனைவரும் எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்டில் மூன்று வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கூடவே பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல் டெஸ்டுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட்டின் மனைவி கேரி-க்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் பயிற்சி முகாமிலிருந்து விலகவுள்ள ஜோ ரூட், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார். மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு தனது வீட்டில் 7 நாள்களுக்குச் சுயமாகத் தனிமைப்படுத்திகொள்வார். 2-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு இங்கிலாந்து அணியினருடன் ஜோ ரூட் இணைந்து கொள்வார். இதனால் முதல் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் இடம்பெறவில்லை. சாம் கரண், பென் ஃபோக்ஸ் போன்ற வீரர்கள் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

இங்கிலாந்து அணி (முதல் டெஸ்ட்):

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ராரி பேர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஸாக் கிராவ்லி, ஜோ டென்லி, ஒல்லி போப், டாம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com