குவியும் பாராட்டுகள்: நிறவெறிக்கு எதிரான கருத்துகளைக் கண்ணீருடன் வெளிப்படுத்திய மைக்கேல் ஹோல்டிங்!

கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கம் என்பது வெள்ளையர்களைக் கருப்பர்கள் முந்திச் செல்வதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல.
குவியும் பாராட்டுகள்: நிறவெறிக்கு எதிரான கருத்துகளைக் கண்ணீருடன் வெளிப்படுத்திய மைக்கேல் ஹோல்டிங்!

சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவே கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கம் மக்களால் தொடங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார். 

மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை காவலர்கள் கைது செய்தனா். அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய 4 போலீஸாா் பணி நீக்கம் செய்யப்பட்டனா். அவா்களில், ஃபிளாய்டின் மரணத்துக்குக் காரணமான டெரெக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிறவெறி எதிா்ப்பு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

ஜார்ஜ் ஃபிளாய்ட் விவகாரம் குறித்து ஐசிசி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் டேரன் சாமி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து ஐசிசி வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்ததாவது: பன்முகத்தன்மை இல்லையென்றால் கிரிக்கெட் கிடையாது. பன்முகத்தன்மை இல்லாமல் முழுப் பலனும் கிடைக்காது என்று கூறிய ஐசிசி, இதனுடன் 2019 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற முக்கியமான தருணத்தையும் வெளியிட்டது. அதில், ஆர்ச்சர் பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி வென்ற தருணம் விடியோவாக வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செளதாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. மழை காரணமாக டாஸ் நிகழ்வு தாமதமானது. இந்நிலையில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இனப்பாகுபாடு குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ஹோல்டிங் பேசினார். கண்ணீருடன் நிறவெறி குறித்து தன்னுடைய கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். இதற்குச் சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஹோல்டிங் பேசியதாவது:

அமெரிக்காவில் ஒரு கருப்பரை வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மிரட்டிய சம்பவத்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். பூங்காவில் நாயை வைத்திருந்த பெண்ணிடம், அதை சங்கிலியால் கட்டும்படி கருப்பர் கூறியுள்ளார். சட்டப்படி அப்படித்தான் செய்யவேண்டும் என்றார். ஆனால் அந்தப் பெண் கருப்பரை மிரட்டியுள்ளார். காவலர்களுக்கு போன் செய்து கருப்பர் ஒருவர் என்னை மிரட்டுகிறார் எனச் சொல்லப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

காவலர்களைக் கொண்டு ஒரு கருப்பரை மிரட்ட முடியும் என்று அவர் வாழும் சமூகம் அவருக்கு அதிகாரம் வழங்கியிருக்காவிட்டால், அத்தகைய அதிகாரம் தன்னிடம் இருக்கிறது என்று அவர் நம்பாமல் போயிருந்தால் அந்தப் பெண் அதைச் செய்திருக்க மாட்டார் 

அவர் வாழும் சமூகம் காரணமாக உடனடியாக அப்படி எதிர்வினையாற்றியுள்ளார். மக்களுக்கு நிறவெறி பற்றி எடுத்துச் சொல்லாவிட்டால் உங்களால் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. 

ஜாா்ஜ் ஃபிளாய்ட் மரணத்தில் காவலர்களின் முகத்தைக் கவனியுங்கள். அவர்களுக்கு அதில் அக்கறையில்லை என்பது போல நடந்துகொண்டார்கள். இன்னொரு கருப்பரை நாம் கொன்றுள்ளோம் (என்று எண்ணுவது போல இருந்தது). கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் போராட்டத்தில் பல வெள்ளையர்களும் கலந்துகொண்டார்கள். இது மாற்றத்தைக் கொண்டு வரும். இந்த இயக்கம் எதற்காகப் போராடுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் நிறைய கருப்பர்களும் சில வெள்ளையர்களும் மட்டும் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். இப்போது ஏராளமான வெள்ளையர்கள் கலந்துகொண்டார்கள். அதுதான் வித்தியாசம். 

ஜாா்ஜ் ஃபிளாய்ட்டுக்கு நடந்தது அருவருப்பானது. இதுவரை நடந்ததெல்லாம் போதும் என மக்கள் எண்ணுகிறார்கள். மக்களை நடத்துவதில் உள்ள வேறுபாடுகளை அனைவரும் அடையாளம் கண்டுள்ளார்கள். 

நாம் அனைவருமே மனிதர்கள். கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கம் என்பது வெள்ளையர்களைக் கருப்பர்கள் முந்திச் செல்வதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல. அதன் நோக்கமே சமத்துவத்தை நிலைநாட்டுவதுதான் என்று கூறியுள்ளார். 

ஹோல்டிங்கின் பேச்சின் விடியோவை ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதைக் கண்ட பலரும் ஹோல்டிங்கின் பேச்சுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com