500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார் பிராட்
By DIN | Published On : 28th July 2020 05:10 PM | Last Updated : 28th July 2020 06:16 PM | அ+அ அ- |

புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிராத்வைட் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் 491 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் பிராட்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் பிராட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளை மிரட்டினார். இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சிலும் பிராட் முதல் 2 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினார். இதன்பிறகு, ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், 500-வது விக்கெட்டை வீழ்த்த பிராட் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும் 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதனால், பிராட்டின் 500-வது விக்கெட் மேலும் ஒரு நாள் தள்ளிப்போனது.
இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தின் 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் 8-வது ஓவரை வீசிய பிராட், பிராத்வைட்டை (19 ரன்கள்) எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500-வது விக்கெட் என்ற சாதனையை பிராட் படைத்தார்.
சர்வதேச அளவில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டும் 7-வது வீரர் ஸ்டுவர்ட் பிராட். இந்த மைல்கல்லை எட்டும் 4-வது வேகப்பந்துவீச்சாளர் இவர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:
வ.எண் | வீரர்கள் | விக்கெட்டுகள் | சராசரி |
1. | முத்தையா முரளிதரன் | 800 | 22.72 |
2. | ஷேர்ன் வார்னே | 708 | 25.41 |
3. | அனில் கும்ப்ளே | 619 | 29.65 |
4. | ஜேம்ஸ் ஆண்டர்சன் | 589 | 26.85 |
5. | கிளென் மெக்ராத் | 563 | 21.64 |
6. | கோர்ட்னி வால்ஷ் | 519 | 24.44 |
7. | ஸ்டுவர்ட் பிராட் | 500 | 28.00 |