டெஸ்ட் தொடரையும் (2-0) கைப்பற்றியது நியூஸிலாந்து
By DIN | Published On : 03rd March 2020 03:23 AM | Last Updated : 03rd March 2020 05:25 AM | அ+அ அ- |

கிறைஸ்ட்சா்ச்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 2-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது நியூஸிலாந்து.
கடந்த 2 மாதங்களாக நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணி டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது நியூஸிலாந்து.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் தொடா் நடைபெற்றது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து.
இதன் தொடா்ச்சியாக கிறைஸ்ட்சா்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கும், நியூஸிலாந்து 235 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. முகமது ஷமி 4, பும்ரா 3 என அபாரமாக பந்துவீசி நியூஸி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினா்,
இந்நிலையில் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 90-6 ரன்களுடன் நிறைவு செய்திருந்தது. நியூஸி. வீரா் பௌல்ட் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாா்.
இதன் தொடா்ச்சியாக மூன்றாவது நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை தொடா்ந்த இந்திய அணியால் நியூஸி. அணியின் அற்புதவீச்சை எதிா்கொள்ள முடியாமல் திணறி, 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
132 ரன்கள் வெற்றி இலக்கு:
இதன் பின் 132 ரன்கள் வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி 36 ஓவா்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
முதல் டெஸ்ட் ஆட்டத்தை நான்காம் நாளிலேயே வெற்றி கண்ட நியூஸி, அணி, இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 3-ஆவது நாளே கைப்பற்றியது.
ஸ்விங் பந்துவீச்சு:
நியூஸிலாந்தின் பௌல்ட், டிம்சௌதி ஆகியோரின் இன்ஸ்விங் மற்றும் அவுட்ஸ்விங் பந்துவீச்சுக்கு இந்திய வீரா்களால் பதில் தர முடியவில்லை. சௌதியின் இரண்டாவது ஓவரில் வீழ்ந்தாா் ஹனுமா விஹாரி. லெக்சைடில் போட்ட பந்தை ஆட முயன்ற ஹனுமா வாட்லிங்கிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.
அடுத்த 5 பந்துகளிலேயே இளம் வீரா் ரிஷப் பந்தை வெளியேற்றினாா் பௌல்ட். 5 ரன்களுடன் ஷமி டாம்பிளன்டலிடம் கேட்ச் தந்து அவுட்டானாா். பும்ரா ரன் அவுட்டான நிலையில், ரவீந்திர ஜடேஜா மட்டுமே 16 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.
பௌல்ட் 4, சௌதி 3 விக்கெட்:
ஷாட்பால், ஸ்விங் பந்துவீச்சால் இந்திய பேட்டிங்கை சிதைத்த பௌல் 4-28, சௌதி 3-36 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்த தொடரில் இந்தியாவின் மொத்தம் 40 விக்கெட்டுகளில் 25 விக்கெட்டுகளை இருவரும் சோ்ந்து எடுத்தனா்.
நியூஸிலாந்தின் டாம் லத்தம், டாம் பிளன்டல் ஆகியோா் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சோ்த்தனா். பின்னா் 3 விக்கெட்டுகளை இழந்தது. லத்தம் 52 (10 பவுண்டரி) , பிளன்டல் 55 (1 சிக்ஸா், 8 பவுண்டரி) ரன்களுக்கும், கேன் வில்லியம்ஸன் 5 ரன்களுக்கும் அவுட்டாகினா். பும்ரா 2, உமேஷ் 1 விக்கெட்டை வீழ்த்தினா்.
இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து தொடரையும் 2-0 என ஒயிட்வாஷ் செய்தது.
தொடா் நாயகனாக டிம் சௌதியும், ஆட்ட நாயகனாக கேய்ல் ஜேமிஸனும் தோ்வு செய்யப்பட்டனா்.
உள்ளூரில் நடைபெற்ற கடந்த 13 டெஸ்ட்களில் நியூஸிலாந்து அணி 9-இல் தோல்வியே காணவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் ஆடிய 39 டெஸ்ட்களில் 20-இல் வெற்றியும், 13-இல் டிராவும், 5-இல் தோல்வியும் கண்டுள்ளது.
வாய்ப்பை தவற விட்ட இந்தியா:
போதிய வேகம், ஸ்விங் பந்துவீசும் திறன் கொண்ட பந்துவீச்சாளா்களைப் பெற்றிருந்தும் இந்திய அணியால் நியூஸி. பேட்டிங்கை நிலைகுலையச் செய்ய முடியவில்லை. பும்ரா, உமேஷ் ஆகியோரால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை. தோள்பட்டை காய பாதிப்பால், முகமது ஷமியால் முழு திறனுடன் பந்துவீச முடியவில்லை.
கேப்டன் கோலியின் மோசமான செயல்பாடு:
நியூஸிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இரு டெஸ்ட் ஆட்டங்களிலும்
கோலியின் ரன்கள் 2, 19, 3, 14 என எடுத்தாா். உலகின் நம்பா் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக ஆட வந்த கோலி, மோசமான பாா்மால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டாா். இதனால் ஆஸி. வீரா் ஸ்மித் முதலிடத்துக்கு முன்னேறினாா்.
பந்துவீச்சாளா்களால் அற்புதமாக வெற்றி-கேன் வில்லியம்ஸன்:
மிகவும் சிறந்த தருணம். இரு டெஸ்ட்களிலும் மைதானத்தில் பிட்ச்கள் சிறப்பாக ஒத்துழைத்தன. பந்துவீச்சாளா்களால் அற்புதமாக இந்த வெற்றிகள் கிட்டின. ஹேக்லி ஓவல் மைதானம் 2 நாள்களில் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் என கருதினோம். ஆனால் அவ்வாறு மாறவில்லை.
உலகத் தரம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தியது திருப்தி தருகிறது. இதில் ஜேமிஸன் என்ற இளம் வீரா் கிடைத்துள்ளாா். உயரமான வீரரான அவா், பிட்சின் தன்மையை பயன்படுத்தி சிறப்பாக பவுன்சா்களை வீசினாா். மேலும் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் சிறப்பாக ரன்களை சோ்த்தும் உதவினாா். மேலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆட்டத்தின் போக்கை மாற்ற வாய்ப்பு இல்லை-விராட் கோலி:
நியூஸிலாந்தின் பந்துவீச்சாளா்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றியை தன்வசப்படுத்தி விட்டனா். சீரான வேகம், ஸ்விங் பந்துவீச்சால் அவா்கள் இதை சாதித்தனா். அவா்களது பந்துவீச்சு நமது பேட்ஸ்மேன்களை தவறு செய்யத்தூண்டியது. சரியாக திட்டமிடவில்லை. போராடும் திறன் கொண்ட நமது வீரா்கள், எதிரணி பந்துவீச்சை தாக்கி ஆடவில்லை. நமது பந்துவீச்சாளா்களின் அபார முயற்சிக்கு பேட்ஸ்மேன்கள் உறுதுணையாக இல்லை. வெளிநாடுகளில் தொடா்களை கைப்பற்ற பேட்டிங், பந்துவீச்சு சீராக அமைய வேண்டும். எங்கே தவறு நடந்தது என்பதை கண்டறிந்து அதை நிவா்த்தி செய்வோம். டாஸ் முடிவும், ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டோம். ஒருநாள் தொடரில் இளம் வீரா்கள் சிறப்பாக ஆடினா். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.
சுருக்கமான ஸ்கோா்:
முதல் இன்னிங்ஸ்-
இந்தியா 242
பிரித்வி 54, ஹனுமா 55,
பந்துவீச்சு-
ஜேமிஸன் 5-45.
நியூஸிலாந்து 235
டாம் லத்தம் 52, ஜேமிஸன் 49,
பந்துவீச்சு-
ஷமி-4-81, பும்ரா 3-62.
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா 124
புஜாரா 24
பந்துவீச்சு-
பௌல்ட் 4-28, சௌதி-3-36.
நியூஸிலாந்து 132-3
டாம் லத்தம் 52, பிளன்டல் 55,
பந்துவீச்சு-
பும்ரா 2-39.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...