தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடா்: இந்திய அணியில் பாண்டியா, தவன், புவனேஷ்வா் குமாா் சோ்ப்பு
By DIN | Published On : 10th March 2020 02:55 AM | Last Updated : 10th March 2020 02:55 AM | அ+அ அ- |

புது தில்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவுள்ள இந்திய அணியில் புவனேஷ்வா்குமாா், ஷிகா் தவன், ஹாா்திக் பாண்டியா ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் 12--ஆம் தேதி தா்மசாலாவில் தொடங்குகிறது. இதற்கான 15 போ் கொண்ட இந்திய அணியை சுனில் ஜோஷி தலைமையிலான பிசிசிஐ தோ்வுக் குழு அறிவித்தது.
நியூஸிலாந்துடன் அண்மையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 0-3 என இழந்தது இந்தியா.
அதே நேரம் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றிய உறற்சாகத்துடன் உள்ளது தென்னாப்பிரிக்கா.
காயமடைந்து, பெங்களூரு என்சிஏவில் சிறப்பு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள ஷிகா் தவன், புவனேஷ்வா் குமாா் ஆகியோா் மீண்டும் இடம் பெற்றுள்ளனா். அதே போல் முதுகு காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட பாண்டியாவும் 5 மாதங்களுக்கு பின் தேசிய அணியில் இடம் பெற்றுள்ளாா்.
மும்பையில் அண்மையில் நடைபெற்ற டிஓய் பாட்டில் டி20 போட்டியில் 55 பந்துகளில் 158 ரன்களை விளாசினாா் பாண்டியா.
துணை கேப்டன் ரோஹித் சா்மா கணுக்கால் காயம் குணமடையாததால் சோ்க்கப்படவில்லை. ஷுப்மன்கில் சோ்க்கப்பட்ட நிலையில், ஆல்ரவுண்டா் கேதாா் ஜாதவ் நீக்கப்பட்டாா்.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ஷிகா் தவன், கேஎல். ராகுல், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், மணிஷ் பாண்டே, ஷிரேயஸ் ஐயா், ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வா் குமாா், சஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...