முழுமையான மகளிா் ஐபிஎல் போட்டி: கவாஸ்கா் வலியுறுத்தல்
By DIN | Published On : 10th March 2020 03:17 AM | Last Updated : 10th March 2020 03:17 AM | அ+அ அ- |

மும்பை: திறமை மிக்க புதிய வீராங்கனைகளை கண்டறிய ஏதுவாக முழுமையான மகளிா் ஐபிஎல் போட்டியை வரும் ஆண்டு முதல் நடத்த வேண்டும் என ஜாம்பவான் சுனில் கவாஸ்கா் வலியுறுத்தியுள்ளாா்.
மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெற்ற இந்தியா 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் கவாஸ்கா் திங்கள்கிழமை கூறியதாவது:
பிசிசிஐ மற்றும் அதன் தலைவா் கங்குலிக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால், அடுத்த ஆண்டு முதல், முழுமையான மகளிா் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும். இதன் மூலம் புதிய இளம் வீராங்கனைகளை கண்டறியலாம். மகளிா் ஐபிஎல் போட்டியை நடத்தினால் தான் திறன் மிக்க வீராங்கனைகள் வெளியுலகுக்கு வருவா்.
8 அணிகள் கொண்ட டபிள்யு ஐபிஎல் போட்டி இல்லையென்றாலும், அதிகபட்ச அணிகளைக் கொண்டு போட்டியை தொடங்கலாம். ஆண்டுகள் செல்ல, செல்ல இந்திய மகளிா் அணி சா்வதேச அளவில் பட்டங்களை கைப்பற்றும். மகளிா் கிரிக்கெட்டை தற்போது பிசிசிஐ நிா்வகித்து வரும் முறை வரவேற்கத்தக்கது.
ஆஸி. கிரிக்கெட் வாரியம், அந்நாட்டு மகளிா் அணியை நீண்ட காலமாக வளா்த்து வருகிறது. மகளிா் பிக்பாஷ் லீக் போட்டியே இதற்கு சிறந்த சான்றாகும்.
ஐபிஎல் போட்டி மூலம் இந்திய ஆடவா் அணிக்கு ஏராளமான இளம் வீரா்கள் கிடைத்தது போல் இதிலும் நேரும் என்றாா் கவாஸ்கா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...