கரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐஎஸ்எல் இறுதிச்சுற்று ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
கரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐஎஸ்எல் இறுதிச்சுற்று ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால், உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 4,379-ஆக உயா்ந்துள்ளது. இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 115 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 40,524 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,21,312-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. விளையாட்டு மைதானங்களுக்கு ரசிகா்கள் ஏப்ரல் மாதம் வரை வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் 14-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை அணியுடன் மோதுகிறது கொல்கத்தா.

ஐஎஸ்எல் 6-ஆவது சீசன் போட்டியில் சென்னையின் எஃப்சி-எஃப்சி கோவா அணிகள் ஒரு அரையிறுதியிலும், நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி-ஏடிகே கொல்கத்தா அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் மோதின. இரு கட்டங்களாக அரையிறுதி ஆட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் அதிக கோல் சராசரி அடிப்படையில் வென்ற அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. 

சென்னையில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியில் கோவா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை. இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டம் கோவாவில் சனிக்கிழமை இரவு இரு அணிகள் இடையே நடைபெற்றது. 6-5 என்ற கோல் சராசரி அடிப்படையில் சென்னையின் அணி இறுதிச் சுற்றில் நுழைந்தது.

பெங்களூருவில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது பெங்களூரு.  அடுத்த ஆட்டத்தில், பெங்களூருவை 3-2 என்ற கோல் சராசரி அடிப்படையில் வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தது கொல்கத்தா (ஏடிகே) அணி. இரண்டாம் கட்ட அரையிறுதி கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவாவில் சனியன்று (மார்ச் 14) நடைபெறவுள்ள ஐஎஸ்எல் இறுதிச்சுற்று ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் யாருமில்லா மைதானத்தில் சென்னை - கொல்கத்தா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார், ஜியோ டிவி ஆகியவற்றில் நேரலையாகக் காணமுடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com