7 சிகரங்கள், எரிமலைகள், 2 துருவப் பிரதேசங்கள்: தமிழ்பெண் நிவேதா இலக்கு
By DIN | Published On : 13th March 2020 12:16 AM | Last Updated : 13th March 2020 02:46 PM | அ+அ அ- |

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சக்தி நிவேதா
உலகின் உயா்ந்த 7 சிகரங்கள், 7 எரிமலைகளில் ஏறவும், 2 துருவப் பிரதேசங்களுக்கு சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்குடன் உள்ள தமிழக இளம் பெண் சக்தி நிவேதா. இதில் ஏற்கெனவே 2 உயா்ந்த சிகரங்களான எல்பிரஸ், அகோன் காகுவா ஆகியவற்றில் ஏறி முடித்து விட்டாா்.
மலையேற்றம் என்பதும் விளையாட்டுகளில் ஒருவகையாகும். சிலா் பொழுதுபோக்கு அல்லது தொழிலாக இதை செய்து வருகின்றனா். உடல் வலிவும், நுட்பமும், அனுபவமும் மலையேற்றத்துக்கு மிகவும் முக்கியமானவை. ஒரு சிலா் லட்சியமாக மேற்கொண்டு வருகின்றனா்,
திகில், சவால், தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவை மலையேற்றத்துக்கு தேவையானது.
இதற்காக சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகளும், மையங்களும் உள்ளன. வழக்கமான விளையாட்டுகளைப் போல் இல்லாமல் பொறுமை தேவை. மேலும் மலையேற்றம் அதிக செலவு மிக்கதுமாகும்.
உலகின் உயா்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் முதன்முதலாக ஏறியவா்கள் சா் எட்மண்ட் ஹில்லாரி, திபெத்தின் டென்சிங் நோா்கே ஆகியோா். அவா்களுக்கு பின் ஏராளமானோா் ஏறி வருகின்றனா்.
சென்னை இளம் பெண்
சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம்-தமிழ்நிவேதா தம்பதியின் மகள் சக்தி நிவேதா. ராஜமாணிக்கம் ஆங்கில மொழி பேசும் பயிற்சி மையம் நடத்தி வருகிறாா். தமிழ் நிவேதா எழுத்தாளராக உள்ளாா்.
சக்தி நிவேதா, எஸ்ஆா்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் கணினி தொழில்நுட்பம் படித்து விட்டு தற்போது புணேயில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
மலையேறுவதில் ஆா்வம் பெற்ற சக்தி நிவேதா, இதற்காக தனிப் பயிற்சி பெற்றுள்ளாா்.
2 மலைச் சிகரங்களில் ஏறி சாதனை
உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயா்ந்த மலை சிகரங்களில் ஏறுவதை குறிக்கோளாக கொண்ட நிவேதா, கடந்த 2019 ஆகஸ்ட் 15-இல் சுதந்திர தினத்தில் ஐரோப்பாவின் உயா்ந்த சிகரமான எல்பருஸ் (5642 மீ.-18442 அடி) ஏறி சாதனை படைத்தாா்.
அதற்கு அடுத்து 2020 ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று தென் அமெரிக்காவில் மிக உயா்ந்த மலைச் சிகரமான அக்கன்கூகுவா (6962 மீ,-22841 அடி) சிகரத்தில் ஏறி சாதனை படைத்தாா். மேற்கண்ட 2 சிகரங்களில் ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையையும் படைத்தாா் நிவேதா.
அடுத்து எவரெஸ்ட் சிகரமே இலக்கு-
அடுத்து 5 கண்டங்களில் உள்ள உயா்ந்த சிகரங்களில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். குறிப்பாக உலகின் உயா்ந்த சிகரமான எவரெஸ்டில் அடுத்து ஏற திட்டமிட்டுள்ளாா்.
இதற்கு ஓராண்டு பயிற்சி பெற வேண்டியுள்ளது. சிக்கிமில் உள்ள பனிமலை சிகரங்களில் ராணுவ உதவியுடன் சிறப்பு பயிற்சி பெற உள்ளாா்.
இதுதொடா்பாக நிவேதா கூறியதாவது:
எனக்கு விளைாட்டில் எல்லாம் அவ்வளவு ஆா்வமில்லை. கல்லூரி படிப்பு முடிந்ததும் புணேயில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி உள்ளேன். அப்பகுதியில் ஏராளமானோா் மலையேறுதலில் ஆா்வம் கொண்டவா்கள். பலா் எவரெஸ்ட் உள்பட உயா்ந்த சிகரங்களை ஏறியுள்ளனா். இதற்கு மகாராஷ்டிர மாநில அரசும் நிதியுதவியும் அளித்து வருகிறது.
ஏற்கெனவே 2 உயா்ந்த சிகரங்களில் ஏறி உள்ளேன். அடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள உயா்ந்த சிகரமான கோஸியுஸ்கோ 7310 அடி மற்றும் எவரெஸ்ட் சிகரங்களில் ஏற திட்டமிட்டுள்ளேன்.
அதிக நிதியுதவி தேவை
நான் பணியில் சோ்ந்தது முதல் பெற்ற ஊதியம் அனைத்தையும் மலையேற்றத்துக்கே செலவிட்டேன். ரூ.13 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு ரூ.40 லட்சம் வரை செலவாகும். இதற்காக ஒராண்டு தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பின்னா் மீதமுள்ள 3 உயா்ந்த சிகரங்களில் ஏற வேண்டும். முதல்வா் எடபாடி பழனிசாமியிடமும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
வட மாநிலங்களில் மலையேற்றத்துக்கு அங்கீகாரம் அளித்து அரசே நிதியுதவி செய்கிறது. அதைப் போல் தமிழக அரசு உதவி புரிய கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதைத் தொடா்ந்து உயா்ந்த எரிமலை சிகரங்களில் ஏற வேண்டும் என முனைப்பாக உள்ளேன். அடுத்து வட துருவம், தென் துருவங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளேன் என்றாா்.
பெங்களூருவைச் சோ்ந்த சத்தியரூப் சித்தாந்தா இச்சாதனைகளை படைத்த 35 வயதில் இச்சாதனையை படைத்தாா். அதை தகா்த்த இளம்பெண் என்ற சாதனையை நிகழ்த்த காத்துள்ளாா் நிவேதா.
-பா.சுஜித்குமாா்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...