கோலியின் கொண்டாட்டம் என்னை உசுப்பி விட்டது: சிக்ஸர் மழை பொழிந்து ஆர்சிபியை வீழ்த்தியது குறித்து ரஸ்ஸல்

இந்த ஆட்டம் இன்னமும் முடியவில்லை என எனக்கு நானே கூறிக்கொண்டேன்.
கோலியின் கொண்டாட்டம் என்னை உசுப்பி விட்டது: சிக்ஸர் மழை பொழிந்து ஆர்சிபியை வீழ்த்தியது குறித்து ரஸ்ஸல்

கடந்த வருட ஐபிஎல் போட்டி ஆண்ட்ரூ ரஸ்ஸலுக்கானது. பல ஆட்டங்களில் ஆக்ரோஷமாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்தார். ஆர்சிபி அணிக்கு எதிராக அவர் விளையாடிய ஓர் ஆட்டத்தை ரசிகர்களால் என்றைக்கும் மறக்க முடியாது.

பெங்களூரில் கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி, முதலில் விளையாடி 205 ரன்களைக் குவித்தது. கோலி 83, டிவில்லியர்ஸ் 63 ரன்கள் எடுத்தார்கள்.

ஆனால், இலக்கை நெருங்க கேகேஆர் அணி சிறிது தடுமாறியது. கடைசிக் கட்டத்தில் 18 பந்துகளில் 53 ரன்கள் தேவை என்கிற நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். அவ்வளவுதான் என நொந்து போனார்கள் கேகேஆர் ரசிகர்கள். ஆனால் அதன் பிறகுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் ரஸ்ஸல். அதிரடியாக விளையாடி, சிக்ஸர் மழை பொழிந்து 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 13 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து தனது அணிக்கு நம்பமுடியாத ஒரு வெற்றியைப் பரிசளித்தார்.

இந்த ஆட்டத்துக்குக் காரணம் விராட் கோலி தான் என்கிறார் ரஸ்ஸல். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

தினேஷ் கார்த்திக் ஓரிரு பவுண்டரிகள் அடித்து ஆட்டமிழந்தார். அவருடைய கேட்ச்சை கோலி தான் பிடித்தார் என நினைக்கிறேன் (சஹால் பிடித்தார்). அப்போது, மைதானத்தில் அமர்ந்திருந்த கேகேஆர் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூரின் பக்கம் திரும்பி ஆக்ரோஷமாக கம் ஆன் எனக் கத்தினார் கோலி. அங்குதான் கேகேஆர் அணியின் ஆதரவாளர்கள், வீரர்களின் குடும்பத்தினர்கள் என எல்லோரும் இருந்தார்கள். கோலியின் கொண்டாட்டம் என்னை உசுப்பிவிட்டது. இந்த ஆட்டம் இன்னமும் முடியவில்லை என எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

உள்ளே உழைந்த ஷுப்மன் கில்லிடம் இவ்வாறு கூறினேன். யார் பந்துவீசினாலும் அதிரடியாக ஆடவிருக்கிறேன். எனவே முடிந்தவரை நான் விளையாட வாய்ப்பளிக்கவும் என்றேன். நிச்சயமாக என அவர் பதில் அளித்தார். அதன்பிறகு சிக்ஸர் சிக்ஸராக அடித்தேன். ஸ்கோர்போர்டைக் கூடப் பார்க்கவில்லை என்றார்.

கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com