ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்டுகள்?: கங்குலி பதில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்டுகள்?: கங்குலி பதில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்களை டிசம்பர், ஜனவரியில் விளையாடவுள்ளது இந்திய அணி. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர்கள் நடைபெறாமல் போனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்கு ரூ. 1,480 கோடி (196 மில்லியன் டாலர்) நஷ்டம் ஏற்படும்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஆஸ்திரேலிய அரசிடம் தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்தால் பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் பேசியது, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையே 5 டெஸ்டுகள் கொண்ட தொடரைத் திட்டமிட்டு வருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமைச் செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கடந்த மாதம் கூறினார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: இந்த சீஸனில் 5 டெஸ்டுகள் கொண்ட தொடரை நடத்துவது சாத்தியமில்லை. ஆனால் பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இடையிலான நட்பு வலுவாக உள்ளது. வருங்காலத்தில் இரு அணிகளும் 5 டெஸ்டுகள் கொண்ட தொடரை விளையாடவேண்டும் என்று கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுள்ளோம். வருங்காலத் தொடர்களில் இதை நடைமுறைப்படுத்தப் போகிறோமா எனப் பார்க்க வேண்டும். அடுத்த டெஸ்ட் அட்டவணையில் இது சாத்தியமாகலாம் என்று கூறினார்.

2018-2019-ல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருது புஜாராவுக்குக் கிடைத்தது. இந்த வருடம் அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 4 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியத் தொடர் குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பில்லை. வெள்ளைப் பந்து ஆட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அவகாசம் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் சுற்றுப்பயணத்தின் கால அளவை நீட்டிக்கவே செய்யும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com