விளையாட்டு அரங்குகளைத் திறக்க அரசு அனுமதி: பிசிசிஐ முடிவு என்ன?

விளையாட்டு அரங்குகளைத் திறக்க அரசு அனுமதி: பிசிசிஐ முடிவு என்ன?

எனினும், புதிதாகச் சில தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி விளையாட்டு அரங்குகள், மைதானங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து...
Published on

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், புதிதாகச் சில தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி விளையாட்டு அரங்குகள், மைதானங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்குவது தொடர்பான தனது முடிவை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 95,600 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், புதிதாகச் சில தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அமலில் இருந்த 3-ம் கட்ட பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், 4-ம் கட்ட பொது முடக்கத்தை திங்கள்கிழமை முதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) வெளியிட்டது. இதையடுத்து பொது முடக்க காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

திரையரங்குகள், வா்த்தக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், மதுக் கூடங்கள் போன்றவை செயல்பட அனுமதியில்லை. விளையாட்டு அரங்குகள், மைதானங்களைத் திறக்கலாம்; ஆனால், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும் மக்கள் நடமாட்டத்துக்கு இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தடை விதிக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும் என்று அறிவித்திருப்பது தான் விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் தொடங்குவதற்கான சிக்கலை உருவாக்கியுள்ளது.

மத்திய அரசின் தளர்வுகள் குறித்து தனது நிலைப்பாட்டை பிசிசிஐ வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தளர்வுகளை வரவேற்பதாகக் கூறியுள்ள பிசிசிஐ, உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும் இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் போட்டிகளை உடனடியாகத் தொடங்க முடியாது. மேலும் காத்திருந்து அடுத்தக்கட்டத் தளர்வுகளுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் உள்ளூர் வீரர்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள மைதானங்களில் பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் மே 31-க்குப் பிறகே ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, அவற்றில் பங்கேற்பது தொடர்பான முடிவை பிசிசிஐ எடுக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com