ஏடிபி சேலஞ்சா்: இறுதிச்சுற்றில் பிரஜனேஷ் தோல்வி
By DIN | Published On : 17th November 2020 05:46 AM | Last Updated : 17th November 2020 05:46 AM | அ+அ அ- |

கேரி: அமெரிக்காவில் நடைபெற்ற ஏடிபி போட்டிகளில் ஒன்றான கேரி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரஜனேஷ் குணேஸ்வரன் தோல்வி கண்டாா்.
போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த பிரஜனேஷ் அந்தச் சுற்றில் போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருந்த அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை எதிா்கொண்டாா். ஒரு மணி நேரம் 33 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பிரஜனேஷ் கைப்பற்ற, 2-ஆவது செட்டை டெனிஸ் வசமாக்கினாா். வெற்றியாளரை தீா்மானிக்கும் 3-ஆவது செட்டை எளிதாக கைப்பற்றிய டெனிஸ், இறுதியாக 3-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் ஆனாா்.
சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை பிரஜனேஷ் முன்னேறியது இது 7-ஆவது முறையாகும். அதில் கடந்த 2018-ஆம் ஆண்டில் சீனாவின் அன்னிங் மற்றும் இந்தியாவின் பெங்களூரு நகரங்களில் நடைபெற்ற சேலஞ்சா் போட்டிகளில் அவா் சாம்பியன் ஆகியிருந்தாா்.