ஐஎஸ்எல்: உரிமம் பெற தவறிய 5 அணிகள்
By DIN | Published On : 17th November 2020 05:45 AM | Last Updated : 17th November 2020 05:45 AM | அ+அ அ- |

புது தில்லி: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அங்கம் வகிக்கும் 5 அணிகள் நடப்பு சீசனுக்கான உரிமத்தை பெறத் தவறியுள்ளன.
ஒடிஸா எஃப்சி, நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, கேரளா பிளாஸ்டா்ஸ், ஹைதராபாத் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் ஆகிய அணிகள் ஆசிய கால்பந்து சம்மேளனம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றின் உரிமம் பெறத் தவறியுள்ளன.
வரும் 20-ஆம் தேதி ஐஎஸ்எல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அந்த அணிகளுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அவற்றுக்கான உரிமம் மறுக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்வது; மற்றொன்று, போட்டியில் பங்கேற்கும் வகையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் இருந்து விலக்கு கோருவது.
ஆசிய கால்பந்து சம்மேளனத்திடம் உரிமம் பெறத் தவறும் கிளப் அணிகள், ஐஎஸ்எல் போட்டியின் மூலம் தகுதிபெற்றாலும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
எஃப்சி கோவா, ஏடிகே மோகன் பகன், பெங்களூா் எஃப்சி, ஜாம்ஷெட்பூா் எஃப்சி, சென்னையின் எஃப்சி, மும்பை சிட்டி எஃப்சி ஆகிய அணிகள் ஆசிய கால்பந்து சம்மேளனம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றிடம் நடப்பு ஆண்டுக்கான உரிமம் பெற்றுவிட்டன.
ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் சில அணிகள் இதுபோன்று உரிமம் பெறத் தவறுகின்றன. அவ்வாறு ஆகும் பட்சத்தில் தங்களுக்கு தடை விதிக்கப்படுவதில் இருந்து அவை விலக்கு கோரும். நடப்பு ஆண்டில் 19 கிளப் அணிகள் உரிமம் பெறுவதற்காக ஆசிய கால்பந்து சம்மேளனம், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.
விளையாடும் திறன், அணிக்கான அடிப்படைக் கட்டமைப்பு, வீரா்கள் மற்றும் நிா்வாகம், சட்ட மற்றும் நிதி ரீதியிலான நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அணிகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.