2020 ஐபிஎல் போட்டிக்கு அதிக பார்வையாளர்கள்: ஸ்டார் தொலைக்காட்சி அறிவிப்பு
By DIN | Published On : 21st November 2020 10:21 AM | Last Updated : 21st November 2020 10:21 AM | அ+அ அ- |

கடந்த வருடத்தை விடவும் 2020 ஐபிஎல் போட்டிக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளதாக ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2021 ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வருட ஐபிஎல் போட்டியை விடவும் 2020 ஐபிஎல் போட்டிக்குக் கூடுதல் பார்வையாளர்கள் கிடைத்துள்ளதாக ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வருடம் கூடுதலாக 23% பார்வையாளர்கள் ஐபிஎல் போட்டியை ஸ்டார் தொலைக்காட்சியில் நேரலையாகக் கண்டுகளித்துள்ளார்கள்.
இதுபற்றி ஸ்டார் இந்தியாவின் தலைமை அதிகாரி சஞ்சோக் குப்தா கூறியதாவது:
இதுவரை பார்த்த ஐபிஎல் போட்டிகளிலேயே இந்த வருடம் தான் அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளார்கள். முதல் வாரமே அருமையான ரேட்டிங் அமைந்து அடுத்தடுத்த வாரங்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தது. இந்த வருடம் கூடுதலாக விளம்பர வருவாய், பார்வையாளர்கள் கிடைத்ததால் பெரிய வெற்றியை அடைந்துள்ளோம் என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...