தோனிக்கு கிரிக்கெட் முக்கியம், எனக்கு அவர் முக்கியம்: மனைவி சாக்ஷி
By DIN | Published On : 21st November 2020 05:38 PM | Last Updated : 21st November 2020 05:38 PM | அ+அ அ- |

தோனிக்கு கிரிக்கெட் முக்கியம், எனக்கு அவர் முக்கியம் என சாக்ஷி கூறியுள்ளார்.
சமீபத்தில் தன்னுடைய 32-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் தோனியின் மனைவி சாக்ஷி. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூகவலைத்தளத்துக்கு அளித்த பேட்டியில் தோனி பற்றி சாக்ஷி கூறியதாவது:
அவர் எல்லாவற்றிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பார். நான் மட்டும்தான் அவரைத் தொந்தரவு செய்வேன். ஏனெனில் நான் தான் அவருக்கு நெருக்கமாக உள்ளேன். என் மீது கோபத்தைக் காண்பிப்பார். எனக்கு அதனால் பிரச்னையில்லை.
வீட்டில் நாங்கள் கிரிக்கெட் பற்றி பேசமாட்டோம். அது அவருடைய தொழில். அவர் தொழில்முறை விளையாட்டு வீரர். மகள் ஜிவா, அவர் சொல்வதைத்தான் கேட்பாள். சீக்கிரம் சாப்பிடு என நானோ மற்றவர்களோ சொல்ல வேண்டியிருந்தால் பத்து முறை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும். தோனி ஒருமுறை தான் சொல்வார். உடனடியாக வேலையை முடித்துவிடுவாள்.
மகள் ஜிவா பிறந்த போது தோனி அருகில் இல்லாதது பற்றி கேட்கிறீர்கள். உலகக் கோப்பையின்போது மகள் பிறந்தாள். அச்சமயத்தில் மகளைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்குத் திரும்பி வருவது சரியாக இருக்காது. தோனி பார்க்க வரவில்லையா என மருத்துவமனையில் பலரும் கேட்டார்கள். எனக்கு அதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. அவருக்கு கிரிக்கெட் முக்கியம், எனக்கு அவர் முக்கியம். உங்களுக்குக் காதல் இருக்கும்போது அதைத் தியாகம் எனக் கூறக்கூடாது. அந்த நபர் மீது காதல் இருப்பதால் அதைச் செய்கிறீர்கள் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...