ஐபிஎல் போட்டியில் விராட் கோலியை நேருக்கு நேராக முறைத்துப் பார்த்த சம்பவம் பற்றி சூர்யகுமார் யாதவ்

அந்தச் சம்பவம் இருவர் தரப்பிலும் இயல்பாக நடைபெற்றது. நீண்ட நாளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி...
ஐபிஎல் போட்டியில் விராட் கோலியை நேருக்கு நேராக முறைத்துப் பார்த்த சம்பவம் பற்றி சூர்யகுமார் யாதவ்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியை நேருக்கு நேராக முறைத்துப் பார்த்த சம்பவம் பற்றி மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முன்னதாக, முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார் சூர்யகுமார் யாதவ். இதனால் ஆட்ட முடிவில் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அந்த ஆட்டத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய டி20 அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வாகவில்லை. இதற்கு இந்திய ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பு வெளிப்படுத்தினார்கள். பல வருடங்களாக திறமையுடன் விளையாடி வரும் சூர்யகுமாரை இந்திய டி20 அணிக்குக் கட்டாயம் தேர்வு செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். 

இந்த ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார் சூர்யகுமார். தன்னை இந்திய அணிக்குத் தேர்வு செய்யாத கோபத்தை ஆடுகளத்தில் வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் உணர்ந்தார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. டேல் ஸ்டெய்ன் வீசிய அந்த ஓவரின் கடைசிப் பந்தை எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் நின்றுகொண்டிருந்த கோலியிடம் அடித்தார் சூர்யகுமார். பந்தைப் பிடித்த கோலி, நேராக சூர்யகுமாரை நோக்கி நடந்து வந்தார். இதனால் தடுமாற்றம் அடையாத சூர்யகுமார், கோலியைப் பார்த்தபடி முறைத்தார். இருவருமே சில நொடிகள் ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்தார்கள். பிறகு சூர்யகுமார் அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிட்டார். 

மேலும் ஆட்டம் முடிந்த பிறகு தனது அணி வீரர்களைப் பார்த்து, ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என சைகையால் உணர்த்தினார் சூர்யகுமார். 

கோலியை சூர்யகுமார் நேருக்கு நேராக எதிர்கொண்ட விதம் ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. சூர்யகுமாரின் துணிச்சலைப் பாராட்டி சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதினார்கள். 

இந்தச் சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:

அன்று, ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருந்தேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி விடுவோம். எனவே ரன்கள் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். அந்த நாளில் ரன்கள் எடுத்து அணிக்கு உதவியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அந்தச் சம்பவம் இருவர் தரப்பிலும் இயல்பாக நடைபெற்றது. நீண்ட நாளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலியை பெரிய ஊக்கமாகக் கருதுகிறேன். அவருடைய உற்சாகம், ஆதிக்கம் செலுத்தும் பாங்கு என எல்லாவற்றையும் ஆடுகளத்தில் காண முடியும், அது எந்த வகை கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும். ஆட்டம் முடிந்த பிறகு அச்சம்பவத்தைக் குறிப்பிட்டு இருவரும் சிரித்துக்கொண்டோம். அந்த ஆட்டத்தில் நான் நன்றாக விளையாடியதற்காக கோலி என்னை வாழ்த்தினார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com