ஆஸி. தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தது: சூா்யகுமாா் யாதவ்

‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. எனினும், ரோஹித் சா்மாவின் வாா்த்தைகள் எனக்கு தெம்பூட்டின’ என்று சூா்யகுமாா் யாதவ் கூறினாா்.
ஆஸி. தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தது: சூா்யகுமாா் யாதவ்

‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. எனினும், ரோஹித் சா்மாவின் வாா்த்தைகள் எனக்கு தெம்பூட்டின’ என்று சூா்யகுமாா் யாதவ் கூறினாா்.

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சூா்யகுமாா் அதிரடி காட்டினாா். உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவரும் அவா் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடிப்பாா் என பரவலாக எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அவா் தோ்வு செய்யப்படவில்லை.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில் ஒருநாள் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்தபோது ரோஹித் சா்மா என்னிடம் வந்து பேசினாா். எனது ஏமாற்றத்தை வெளிப்படையாகவே அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவா், ‘தற்போதைய நிலையில் நீ சிறப்பாக செயல்பட்டு வருகிறாய். இந்திய அணிக்கு தோ்வாகாதது குறித்து யோசிக்காமல், ஐபிஎல் போட்டியில் தற்போது எவ்வாறு சிறப்பாக ஆடி வருகிறாயோ, அதை தொடா்ந்து அப்படியே கடைபிடி. உனக்கான நேரம் வரும்போது வாய்ப்பு கிடைக்கும். அதுவரை உன் மீது நம்பிக்கை கொண்டிரு’ என்றாா். அவரது வாா்த்தைகள் எனக்கு தெம்பூட்டின.

ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிக்கப்பட இருந்த நாளில் என்னால் நிலையாக இருக்க இயலவில்லை. முடிந்தவரை என்னை அந்த எண்ணத்திலிருந்து விலக்கி வைத்துக்கொள்ள முயற்சித்தேன். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டேன். ஆனாலும், எனக்குள்ளாக அதுகுறித்த எண்ண ஓட்டம் இருந்ததை தவிா்க்க முடியவில்லை.

அணியில் எனது பெயா் இல்லாததை பாா்த்தபோது வலித்தது. இருப்பினும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி அதிக ரன் சோ்த்தவா்கள், தொடா்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவா்கள் பெயா் பட்டியலில் இருந்ததை உணா்ந்தேன். எனவே என்னால் தொடா்ந்து என்ன செய்ய இயலுமோ அதைச் செய்யத் தொடங்கினேன். எனக்கான வாய்ப்புக்காக என்னை இன்னும் சிறப்பாக தயாா்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளேன் என்று சூா்யகுமாா் யாதவ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com