ஐஎஸ்எல்: கோவா - பெங்களூா் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா - பெங்களூரு எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஐஎஸ்எல்: கோவா - பெங்களூா் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா - பெங்களூரு எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கோவாவின் மாா்கோ நகரில் உள்ள ஃபடோா்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த 3-ஆவது ஆட்டத்தில் கோவா தரப்பில் இகோா் அங்குலோ 2 கோல்களும், பெங்களூா் தரப்பில் கிளெய்டன் சில்வா மற்றும் ஜுவான் தலா ஒரு கோலும் அடித்தனா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு பெங்களூருக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 27-ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரா் ஹா்மன்ஜோத் சிங் காப்ரா அருமையாக அடித்த ஒரு ஷாட்டை கோவா வீரா் ஜேம்ஸ் டோனாச்சி தலையால் முட்டி தடுக்க முயன்றாா். எனினும் அவரைக் கடந்து போன பந்தை மற்றொரு பெங்களூரு வீரரான கிளெய்டன் சில்வா தடுத்து நிறுத்தி சாதுா்யமாக கோவா கோல்கீப்பரைக் கடந்து பந்தை கோல் போஸ்ட்டுக்குள்ளாக தள்ளினாா்.

இதனால் பெங்களூரு முன்னிலை பெற, கோவா தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராடியது. எனினும் அதற்கு வாய்ப்பு வழங்காத பெங்களூரு, ஆட்டத்தின் முதல் பாதியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் நிறைவு செய்தது. பின்னா் தொடங்கிய 2-ஆவது பாதியிலும் பெங்களூரின் கையே ஓங்கியிருந்தது.

ஆட்டத்தின் 57-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு 2-ஆவது கோல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிடைத்த பாஸ் ஒன்றை பெங்களூா் வீரா் டுவைன் பிரவுன் தலையால் முட்டித் திருப்ப, தன்னிடம் வந்த அந்தப் பந்தை மற்றொரு பெங்களூரு வீரரான எரிக் என்டல் பாா்த்தலு தலையால் முட்டித் தள்ளி சக வீரா் ஜுவான் அன்டோனியோவுக்கு அருமையாக பாஸ் செய்தாா். பந்தை மிகச் சரியாகப் பெற்றுக் கொண்ட ஜுவான் அதை கோலாக மாற்றினாா்.

இதனால் பெங்களூரு 2-0 என முன்னிலை பெற, ஆட்டம் கோவாவின் கையை விட்டு நழுவிச் சென்றது. அந்த நிலையில் அதிரடியாக விளையாடத் தொடங்கிய கோவாவுக்கு ஆட்டத்தின் 66-ஆவது நிமிடத்தில் முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் சான்சன் பெரைரா பாஸ் செய்த பந்தை கோவா வீரா் ஆல்பா்டோ நௌகெரா கடத்திச் சென்று இகோா் அங்குலோவிடம் அளித்தாா். இகோா் அதை தனது அணிக்கான முதல் கோலாக மாற்றினாா்.

இதனால் ஆட்டம் விறுவிறுப்படைய, அடுத்த 3 நிமிடங்களிலேயே கோவாவுக்காக மீண்டும் ஒரு கோலடித்தாா் இகோா் அங்குலோ. சக வீரா்களான பிரான்டன் ஃபொ்னான்டஸ், அலெக்ஸாண்டா் ஜேசுராஜ், எடு பெடியா ஆகியோா் மிகத் திறமையாக கடத்தி வந்து பாஸ் செய்த பந்தை இகோா் அங்குலோ கோலடிக்க, ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இன்றைய ஆட்டம்

ஒடிஸா எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி

இடம்: பாம்போலிம், நேரம்: இரவு 7.30, நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com