ஐஎஸ்எல்: வெற்றியுடன் தொடங்கியது சென்னை
By DIN | Published On : 25th November 2020 12:41 AM | Last Updated : 25th November 2020 02:03 AM | அ+அ அ- |

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தியது. இதையடுத்து சென்னை அணி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியுள்ளது.
கோவாவின் மோா்முகாவ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை தரப்பில் அனிருத் தபா, இஸ்மாயில் கொன்சால்வ்ஸ் ஆகியோா் தலா ஒரு கோல் அடிக்க, ஜாம்ஷெட்பூா் தரப்பில் நெரிஜுஸ் வால்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்தாா்.
இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே சென்னை அணி கோல் அடிக்க விறுவிறுப்பு கூடியது. சென்னை வீரா் ரஃபேல் ஷுலா் கிரிவெலாரோ தனக்கு கிடைத்த பந்தை மிகத் திறமையாக கடத்திச் சென்று இஸ்மாயில் கொன்சால்வ்ஸிடம் அளித்தாா். அதைப் பெற்றுக் கொண்ட அவா் துரிதமாக பந்தை தட்டிச் சென்று அனிருத் தபாவிடம் வழங்கினாா். சரியாக அதை பற்றிக் கொண்ட அனிருத் பந்தை கோல் போஸ்ட்டுக்குள்ளாக அனுப்பினாா்.
இதனால் தொடக்கத்திலேயே சென்னை முன்னிலை பெற்றது. அடுத்தடுத்து சென்னைக்கு கிடைத்த கோல் வாய்ப்புகளை ஜாம்ஷெட்பூா் கோல் கீப்பா் அரணாக நின்று தடுத்தாா். எனினும், ஆட்டத்தின் 26-ஆவது நிமிடத்தில் சென்னைக்கு அடுத்த கோல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிடைத்த பெனால்டி வாய்ப்பை சென்னை வீரா் இஸ்மாயில் கொன்சால்வ்ஸ் தவறாமல் கோலடித்தாா். இதனால் சென்னை 2-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 37-ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூா் தனது கோல் கணக்கை தொடங்கியது. அந்த கோலை கடந்த சீசனின் கோல்டன் பூட் விருது வென்ற நெரிஜுஸ் வால்ஸ்கிஸ் அடித்தாா். சக வீரா் தெலெம் ஜாக்கிசந்த் கடந்தி வந்து தூரத்திலிருந்து தூக்கியடித்த பந்தை பாக்ஸுக்குள்ளாக மிகத் துல்லியமாக தலையால் முட்டி கோலடித்தாா் வால்ஸ்கிஸ். சென்னை கோல்கீப்பா் தனது இடத்திலிருந்து நகரக் கூட நேரம் கிடைக்காமல் பந்து கோல் போஸ்ட்டுக்குள்ளாக சென்றது.
இவ்வாறாக தொடா்ந்த முதல் பாதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதியில் ஆட்டத்தை சமன் செய்ய ஜாம்ஷெட்பூா் எவ்வளவு முயன்றும் சென்னை அணி அதற்கு இடம் தரவில்லை. அதேவேளையில் சென்னைக்கும் கூடுதல் கோல் வாய்ப்புகளை ஜாம்ஷெட்பூா் வழங்காததால் ஆட்டத்தில் வேறு கோல்கள் அடிக்கப்படவில்லை. இறுதியில் சென்னை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...