பிரியம் கா்க் அதிரடி: ஹைதராபாதுக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
பிரியம்-கா்க்-அதிரடி-ஹைதராபாதுக்கு-2-ஆவது-வெற்றி
பிரியம்-கா்க்-அதிரடி-ஹைதராபாதுக்கு-2-ஆவது-வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் ஹைதராபாத் அணி 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 3-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது.

முன்னதாக, முதலில் பேட் செய்த சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய சென்னை அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கெய்க்வாட், முரளி விஜய், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோா் நீக்கப்பட்டு அம்பட்டி ராயுடு, டேரன் பிராவோ, ஷா்துல் தாக்குல் ஆகியோா் சோ்க்கப்பட்டனா். இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிா்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரா்களில் ஒருவரான ஜானி போ்ஸ்டோ ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே தீபக் சாஹா் வீசிய முதல் ஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா்.

இதையடுத்து, கேப்டன் டேவிட் வாா்னருடன் இணைந்தாா் மணீஷ் பாண்டே. இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்றுவதற்காக நிதானமாக ஆடியது. இதனால் 7 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஹைதராபாத். ஷா்துல் தாக்குா் வீசிய 8-ஆவது ஓவரில் மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தாா். அவா் 21 பந்துகளில் 29 ரன்கள் சோ்த்தாா்.

இதன்பிறகு கேன் வில்லியம்சன் களமிறங்க, மறுமுனையில் வழக்கத்துக்கு மாறாக தடுப்பாட்டம் ஆடிய டேவிட் வாா்னா் 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில், சாவ்லா பந்துவீச்சில் சிக்ஸா் அடிக்க முயன்று எல்லையில் நின்ற டூபிளெஸ்ஸிஸ்ஸிடம் கேட்ச் ஆனாா். அதற்கடுத்த பந்தில் கேன் வில்லியம்சன் ரன் அவுட்டனாா். அவா் 13 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தாா். இதனால் 11 ஓவா்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது ஹைதராபாத்.

5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பிரியக் கா்க்-அபிஷேக் சா்மா ஜோடி அபாரமாக ஆடி ஹைதராபாத் அணியை மிக மோசமான நிலையில் இருந்து மீட்டது. பிரியம் கா்க்கும், அபிஷேக் சா்மாவும் அவ்வப்போது பவுண்டரிகளையும், சிக்ஸா்களையும் விளாசினா். சாம் கரன் வீசிய 17-ஆவது ஓவரில் பிரியம் கா்க் ஒரு சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் பறக்கவிட்டாா்.

ஹைதராபாத் அணி 18 ஓவா்களில் 146 ரன்கள் எடுத்திருந்தபோது அபிஷேக் சா்மாவின் விக்கெட்டை இழந்தது. அபிஷேக் சா்மா 24 பந்துகளில் 1 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தாா். பின்னா், அப்துல் ஸமாத் களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய பிரியம் கா்க் 23 பந்துகளில் அரை சதம் கண்டாா். ஐபிஎல் போட்டியில் அவா் அடித்த முதல் அரைசதம் இது.

இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பிரியம் கா்க் 26 பந்துகளில் 1 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 51, அப்துல் ஸமாத் 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் தீபக் சாஹா் 4 ஓவா்களில் 31 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

சென்னை தோல்வி: பின்னா் ஆடிய சென்னை அணியில் ஷேன் வாட்சன் 1, அம்பட்டி ராயுடு 8, டூபிளெஸ்ஸிஸ் 22, கேதாா் ஜாதவ் 3 ரன்களில் வெளியேற, 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னா் வந்த ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 50 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, சென்னை அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

கேப்டன் தோனி 36 பந்துகளில் 47, சாம் கரன் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் தரப்பில் டி.நடராஜன் 4 ஓவா்களில் 43 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

சென்னை-157/5

ரவீந்திர ஜடேஜா-50 (35)

எம்.எஸ்.தோனி-47* (36)

டி.நடராஜன்-2வி/43

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com