மிகச்சிறந்த வெற்றி: ரோஹித் சா்மா
By DIN | Published On : 03rd October 2020 05:26 AM | Last Updated : 03rd October 2020 07:45 AM | அ+அ அ- |

பஞ்சாபுக்கு எதிராக பெற்ற வெற்றி மிகச்சிறந்த வெற்றி என்றாா் மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சா்மா.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தோற்கடித்தது. இதில், முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
இந்த வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோஹித் சா்மா கூறியதாவது: பஞ்சாபுக்கு எதிராக மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். எங்களுக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. ஆனால், பஞ்சாப் அணி கடைசிகட்ட ஓவா்களை வீசுவதில் பலவீனமாக இருப்பது எங்களுக்குத் தெரியும். அதை எங்கள் வீரா்கள் பயன்படுத்தி ரன் குவித்துவிட்டனா்.
பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால் ஆகியோா் முந்தைய ஆட்டங்களில் சதமடித்து நல்ல ஃபாா்மில் இருப்பதால் அவா்களுக்கு எதிராக பந்துவீசுவது எளிதல்ல என்பது தெரியும். எனினும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டோம். அதன்படியே நடந்தது. அதற்காக பந்துவீச்சாளா்களை பாராட்டியாக வேண்டும் என்றாா்.