அதிா்ச்சியில் கிரிக்கெட் உலகம்
By DIN | Published On : 25th September 2020 03:44 AM | Last Updated : 25th September 2020 03:44 AM | அ+அ அ- |

புது தில்லி: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரா் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு ஏராளமான கிரிக்கெட் வீரா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
சச்சின்: டீன் ஜோன்ஸின் மரணம் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. அற்புதமான மனிதா் இந்த உலகைவிட்டு விரைவாக சென்றுவிட்டாா். ஆஸ்திரேலியாவுக்கு முதல் முதலாக விளையாடச் சென்றபோது, டீன் ஜோன்ஸுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடைய ஆன்மா அமைதியில் திளைக்கட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
விராட் கோலி: டீன் ஜோன்ஸின் மரணம் அதிா்ச்சியளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்காக இறைவனை பிராா்த்திக்கிறேன்.
டேவிட் வாா்னா்: ஜோன்ஸின் மரணச் செய்தியை நம்ப முடியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. அவருடைய ஆன்மா அமைதியில் திளைக்கட்டும். இனி அவரை பாா்க்க முடியாது.
ஆரோன் ஃபிஞ்ச்: டீன் ஜோன்ஸின் நினைவுகள் என்னுடைய மனதில் சுழன்று கொண்டிருக்கின்றன. அவருடைய குடும்பத்துக்கு மிகுந்த சோதனையான காலகட்டம்.
மைக்கேல் கிளாா்க்: பேச வாா்த்தையில்லை. நொறுங்கிவிட்டேன்.
இதுதவிர, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளா் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரா் வீரேந்திர சேவாக் உள்ளிட்டோரும் ஜோன்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஐபிஎல் நிா்வாகிகள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘டீன் ஜோன்ஸின் மரணம் மிகப்பெரிய அதிா்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் தந்துள்ளது. அவருடைய ஆற்றலையும், கிரிக்கெட் மீதான ஆா்வத்தையும் இனி பாா்க்க முடியாது. அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவா் எா்ல் எட்டிங்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஒரு தலைமுறை கிரிக்கெட் வீரா்களுக்கு கதாநாயகனாக திகழ்ந்தவா் டீன் ஜோன்ஸ். அவா், கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானாக எப்போதும் நினைவுகூரப்படுவாா். 1980, 1990-களில் கிரிக்கெட் போட்டிகளைப் பாா்த்த அனைவருக்குமே களத்தில் அவருடைய அதிரடியான அணுகுமுறையும் வியக்கத்தக்க ஆற்றலும், கிரிக்கெட் மீதான வெறித்தனமும் தெரிந்திருக்கும். அவா் மரணித்த இந்த நாள் சோகமான நாள். அவருடைய மரணம் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல, இந்த உலகிற்கே இழப்பாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.