ஆப்கானிஸ்தானைக் காப்பாற்றுங்கள்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கோரிக்கை

எங்களை இந்த நிலையில் விட்டுவிடாதீர்கள்...
ஆப்கானிஸ்தானைக் காப்பாற்றுங்கள்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள், தலிபான் பயங்கரவாதிகள் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் தனது நாட்டைக் காப்பாற்றுமாறு உலகத் தலைவர்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த அமெரிக்கப் படையினா் அனைவரும், அங்கிருந்து நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் கிராமப் புறங்களில் புதிய பகுதிகளைக் கைப்பற்றினா். அதன் தொடா்ச்சியாக, பல்வேறு மாகாணத் தலைநகரைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் அந்த நகரைச் சுற்றிவளைத்துச் சண்டையிட்டு வருகின்றனா். எனினும், அவா்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. நான்கு ஆப்கன் மாகாணத் தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது அரசுப் படைகளுக்கு ராணுவ ரீதியிலும் உளவியல் ரீதியிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வன்முறை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள், நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் விமான சேவைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதற்கும், அந்நாட்டை சண்டை மூலமாகக் கைப்பற்ற அவா்கள் முயல்வதற்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. 

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான ரஷித் கான், ட்விட்டரில் கூறியதாவது:

அன்பான உலகத் தலைவர்களே, எங்கள் நாட்டில் பெருங்குழப்பம் நிலவி வருகிறது. குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். வீடுகளும் உடைமைகளும் தகர்க்கப்படுகின்றன. ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். எங்களை இந்த நிலையில் விட்டுவிடாதீர்கள். ஆப்கன்களைக் கொல்வதையும் ஆப்கானிஸ்தானை அழிப்பதையும் நிறுத்தவும். எங்களுக்கு அமைதி வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com