ஷமி, பும்ராவை விசில் அடித்து, கைத்தட்டி வரவேற்ற இந்திய அணியினர்: விடியோ

ஷமி, பும்ராவுக்கு இந்திய அணியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள்.
ஷமி, பும்ராவை விசில் அடித்து, கைத்தட்டி வரவேற்ற இந்திய அணியினர்: விடியோ
Published on
Updated on
2 min read

லார்ட்ஸ் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஷமி, பும்ராவுக்கு இந்திய அணியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். இதன் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4-ம் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. 4-ம் நாள் முடிவில் இந்திய அணி, 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.  ரிஷப் பந்த் 14, இஷாந்த் சர்மா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

5-ம் நாளான இன்று, ஆண்டர்சன் ஓவரில் ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் இஷாந்த் சர்மாவும் ஒரு பவுண்டரி அடிக்க இந்திய ரசிகர்கள் குஷியானார்கள். ஆனால் ரிஷப் பந்த் 22 ரன்களிலும் இஷாந்த் சர்மா 16 ரன்களிலும் ஆலி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு பும்ராவும் ஷமியும் கூட்டணி சேர்ந்தார்கள்.

முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர்கள் வீசியதை மனத்தில் வைத்துக்கொண்டு அதேபோல பவுன்சர் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தார்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பும்ரா நடுவரிடம் முறையிட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வுட் வீசிய பவுன்சர் பந்து பும்ராவின் ஹெல்மெட்டில் பட்டது. இந்தச் சூழலால் பேட்டிங்கில் அதிகக் கவனம் செலுத்தி முக்கியமான ரன்களைச் சேர்த்தார்கள் பும்ராவும் ஷமியும். விக்கெட்டுகள் எடுப்பதில் கவனம் செலுத்துவதை விட பும்ராவை வெறுப்பேற்றுவதில் இங்கிலாந்து வீரர்கள் ஆர்வம் செலுத்தியதால் அதற்கான விளைவுகளைச் சந்தித்தார்கள்.

இந்திய அணி 100 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது. இருவரும் கூட்டணி சேர்ந்து 72 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்கள்.

பும்ராவும் ஷமியும் தொடர்ந்து ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை வெறுப்பேற்றினார்கள். 57 பந்துகளில் அரை சதம் எடுத்தார் ஷமி. இது அவருடைய 2-வது டெஸ்ட் அரை சதம். அலி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 

5-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 108 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷமி 56, பும்ரா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

உணவு இடைவேளையின்போது ஓய்வறைக்குத் திரும்பிய ஷமி, பும்ராவுக்கு இந்திய அணியினர் கைத்தட்டி, விசில் அடித்து உற்சாகமான வரவேற்பை அளித்தார்கள். இதன் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com