அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவுக்காக விளையாடுவேன்: உன்முக்த் சந்த்

அமெரிக்காவிலுள்ள இந்தியர்களுக்காக விளையாடுவது போல் உள்ளது.
அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவுக்காக விளையாடுவேன்: உன்முக்த் சந்த்

அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளதாக யு-19 உலகக் கோப்பையை இந்திய அணிக்குப் பெற்றுத் தந்த உன்முக்த் சந்த் கூறியுள்ளார்.

2012 யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த், இறுதிச்சுற்றில் சதமடித்து அசத்தினார். இதனால் அவர் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய ஏ அணிகளில் இடம்பெற்ற உன்முக்த் சந்த், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். சரியாக விளையாடாததால் 2017-ல் தில்லி அணியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு உத்தரகண்ட் அணியில் இணைந்து விளையாடினார். எனினும் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுத்து கவனம் ஈர்க்க முடியவில்லை. 18 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். தில்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளில் இடம்பெற்றார். முதல் தர கிரிக்கெட்டில் 3379 ரன்கள் எடுத்த உன்முக்த் சந்த், 28 வயதில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். பிசிசிஐக்கு விடை கொடுத்து உலகம் முழுவதிலும் உள்ள வாய்ப்புகளைத் தேடிச் செல்கிறேன் என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

இந்நிலையில் அடுத்த மூன்று வருடங்களில் அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளதாக உன்முக்த் சந்த் கூறியுள்ளார். ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்ததில் நம்பிக்கையுடன் உள்ளேன். இங்கு இந்தியர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள இந்தியர்களுக்காக விளையாடுவது போல் உள்ளது. பல நாடுகளில் இருந்தும் கிரிக்கெட் வீரர்கள் இங்கு வந்துள்ளார்கள். நானும் இன்னும் மூன்று வருடங்களில் அமெரிக்காவுக்கு விளையாடத் தகுதி பெற்றுவிடுவேன். அமெரிக்க அணியில் திறமையான வீரர்கள் உள்ளார்கள். மேஜர் லீக் போட்டி நடந்த பிறகு அமெரிக்காவில் கிரிக்கெட் மேலும் வளர்ச்சி பெறும். மைனர் லீக் போட்டிகள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. அடுத்த வருடம் கண்காட்சி ஆட்டங்கள் நடைபெறும். 2023 முதல் மேஜர் லீக் போட்டி அமெரிக்காவில் தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com