டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7-ம் தேதியை, தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.
சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு நீரஜ் சோப்ரா பேட்டியளித்திருந்தார். அதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு தன்னுடைய ஈட்டியைத் தேடியதாகவும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அதை வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார். பிறகு அவரிடம் நான் சென்று, அது என்னுடைய ஈட்டி. கொடுக்கவும். அதை வைத்துத்தான் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறினார். அதனால் தான் முதல் சுற்றில் தான் அவசர அவசரமாக ஈட்டியை வீசியதைப் பார்த்திருக்க முடியும் என்றார்.
இதைவைத்து பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு எதிராகச் சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. இந்திய வீரரின் கவனத்தைத் திசை திருப்ப முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்கள். சில ஊடகங்களில் பாகிஸ்தான் வீரரின் உள்நோக்கத்தைக் கேள்வி எழுப்பியும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் மீதான விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவித்து நீரஜ் சோப்ரா பதிவு எழுதியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
உங்களுடைய பிரசாரத்துக்காக என்னுடைய பேட்டியைப் பயன்படுத்த வேண்டாம். ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவே விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது. என்னுடைய பேட்டியைக் கொண்டு சிலர் எதிர்வினையாற்றுவதைப் பார்த்து வேதனையடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பான விடியோவில் அவர் கூறியதாவது:
என்னுடைய பேட்டி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. எல்லோரும் அவரவருக்குரிய ஈட்டியை வைத்திருப்பார்கள். யாரும் அந்த ஈட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதான் விதிமுறை. என்னுடைய ஈட்டியைக் கொண்டு நதீம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.
ஈட்டி எறிதல் போட்டியில் வீரர்கள் தங்கள் சொந்த ஈட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டி நிர்வாகமும் ஈட்டிகளை வழங்கும். போட்டி நடக்கும் 2 மணி நேரத்துக்கு முன்பு போட்டி நிர்வாகத்திடம் ஈட்டியை ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு அந்தப் போட்டி முடியும் வரை அது நிர்வாகத்தின் உடைமையாகிவிடும். அதனால் அந்த ஈட்டியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். போட்டி முடிந்த பிறகு அந்த ஈட்டிக்குச் சொந்தமான வீரர், தனது ஈட்டியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.