1-1: 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி

டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
1-1: 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. 

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் மூன்றாவது ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் சா்மா மட்டுமே அதிகபட்சமாக 19 ரன்களை சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆண்டா்சன், ஓவா்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. கேப்டன் ரூட் 121 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியத் தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, நேற்று சிறப்பாக விளையாடியது. ராகுல் 8 ரன்களிலும் ரோஹித் சர்மா 59 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். வழக்கத்துக்கு மாறாக விரைவாக ரன்கள் சேர்க்கத் தொடங்கிய புஜாரா 91 ரன்களுடனும் கோலி 45 ரன்களுடனும் நேற்றைய ஆட்ட முடிவில் களத்தில் இருந்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. 8 விக்கெட் மீதமிருந்த நிலையில் இந்திய அணி 139 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இன்று நம்பிக்கையுடன் விளையாடி மேலும் ரன்கள் குவிப்பார்கள் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு இன்று துல்லியமாக இருந்ததால் நிலைமை மாறிப்போனது.

சதத்தை நெருங்கி வந்த புஜாரா இன்று மேலும் ரன் எதுவும் சேர்க்காமல் ஆலி ராபின்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதிலிருந்து சரிவு ஏற்படத் தொடங்கியது. கோலியை 55 ரன்களிலும் ரிஷப் பந்தை 7 ரன்னிலும் வீழ்த்தினார் ஆலி ராபின்சன். ரஹானே, 10 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் வீழ்ந்தார். முதல் 5 விக்கெட்டுகளை இழந்தபிறகு இந்திய அணி பேட்ஸ்மேன்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினார்கள். ஜடேஜா 30 ரன்களில் ஓவர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 99.3 ஓவர்களில் 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. இங்கிலாந்து அணித் தரப்பில் ஆலி ராபின்சன் 5 விக்கெட்டுகளையும் ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன், மொயீன் அலி தலா 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.

டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. 4-வது டெஸ்ட் செப்டம்பர் 2 அன்று தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com