37 ஆண்டுகளாக பூப்பந்து வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படவில்லை: சு. வெங்கடேசன் எம்.பி.

பூப்பந்து வீரர்கள்‌ மத்தியில்‌ அழுத்தமான ஆதங்கம்‌ உள்ளது.
சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன்
Updated on
1 min read

37 ஆண்டுகளாகப் பூப்பந்து வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படாதது குறித்து மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையைப் பகிர்ந்துள்ளார் சு. வெங்கடேசன். அதில் அவர் கூறியதாவது:

சு. வெங்கடேசன்‌ எம்‌.பி. மக்களவையில்‌ எழுப்பியிருந்த கேள்விக்கு (எண்‌ 313 க்கு) ஒன்றிய விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலன்‌ அமைச்சர்‌ மாண்புமிகு அனுராக்‌ சிங்‌ தாகூர்‌ பதில்‌ அளித்துள்ளார்‌.

அர்ஜுனா விருதுக்கான விளையாட்டுகளின்‌ பட்டியலில்‌ பூப்பந்து உண்டா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில்‌ அளித்துள்ளார்‌. இதுவரை அர்ஜுனா விருது பெற்றவர்களின்‌ பட்டியலை, வழங்கிய ஆண்டையும்‌ குறிப்பிட்டு வழங்கியுள்ளார்‌. 1) ஜே.பிச்சையா (1970), 2) ஜெயராமா ஸ்ரீநிவாஸ் (1972), 3) ஏ. கரீம்‌ (1973), 4) எல்‌.ஏ. இக்பால்‌ (1975), 5) ஏ. சாம்‌ கிறிஸ்து தாஸ்‌ (1976), 6) டி. இராஜாராமன்‌ (1984).

இந்த விவரங்கள்‌ அதிர்ச்சியைத் தருகின்றன. 1961-ல் அர்ஜுனா விருது தர ஆரம்பித்ததில்‌ இருந்து 916 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில்‌ 6 பேர்‌ மட்டுமே பூப்பந்து வீரர்கள்‌. கடைசியாய்‌ அந்த விருது பூப்பந்து வீரருக்கு வழங்கப்பட்ட ஆண்டு 1984. முப்பத்து ஏழு ஆண்டுகளாக எந்தவொரு பூப்பந்து வீரருக்கும்‌ இந்த விருது வழங்கப்படவில்லை.

பூப்பந்து இந்தியாவில்‌ மட்டுமின்றி நேபாளம்‌, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மியான்மர்‌, பாகிஸ்தான்‌, பூடான்‌, வங்கதேசம்‌, பிலிப்பைன்ஸ்‌ ஆகிய நாடுகளிலும்‌ விளையாடப்படுகிறது. இத்தகைய விளையாட்டு. அர்ஜுனா விருது பரிசீலனையில்‌ புறக்கணிக்கப்படுவதாகப் பூப்பந்து வீரர்கள்‌ மத்தியில்‌ அழுத்தமான ஆதங்கம்‌ உள்ளது. மேற்கூறிய விவரங்கள்‌ அந்த ஆதங்கத்தில்‌ நியாயம்‌ இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.

ஆகவே ஒன்றிய விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலத்துறை உரிய மட்டத்தில்‌ ஆய்வு செய்து பூப்பந்து விளையாட்டிற்கு நீதி வழங்க வலியுறுத்துகிறேன்‌ என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com