3,400 ஓவர்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நோ பாலை வீசிய அஸ்வின்!

நோ பால் வீசாமல் அதிக பந்துகள் வீசியவர் என்கிற அஸ்வினின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
3,400 ஓவர்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நோ பாலை வீசிய அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் நோ பாலை சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் வீசியுள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர். அஸ்வின் இதுவரை 20,000-க்கும் அதிகமான பந்துகளை வீசியும் ஒருமுறை கூட நோ பால் வீசியதில்லை. ( பந்துவீச்சாளர், பந்துவீச்சு கிரீஸில் உள்ள கோட்டைத் தாண்டி கால் வைக்கும்போது நோ பால் எனப்படும்)

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தனது முதல் டெஸ்ட் நோ பாலை இன்று வீசியுள்ளார் அஸ்வின். இங்கிலாந்து இன்னிங்ஸின் 137-வது ஓவரின் (அஸ்வினின் 38-வது ஓவர்) 2-வது பந்தை அஸ்வின் வீசியபோது அது நோல் பால் என அறிவிக்கப்பட்டது. அந்தப் பந்தில் பவுண்டரி அடித்தார் ஜோ ரூட். இதற்கு முன்பு நோ பால்களைக் கள நடுவர்களே கவனித்து வந்தார்கள். எனினும் சமீபமாக நோ பால்களைத் 3-வது நடுவர் கவனிக்கிறார். 

இதன்மூலம் நோ பால் வீசாமல் அதிக பந்துகள் வீசியவர் என்கிற அஸ்வினின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை டெஸ்டுக்கு முன்பு 74 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அஸ்வின், 20,391 பந்துகளை வீசியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் நோ பால் வீசாமல் அதிக பந்துகளை வீசியவர் என்கிற சாதனை தற்போது இங்கிலாந்தின் கிரீம் ஸ்வானிடம் சென்றுள்ளது. நோ பால் வீசாமல் அவர் 15,349 பந்துகளை வீசியுள்ளார். 2008 முதல் 2013 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ஸ்வான், 60 டெஸ்டுகளில் பங்கேற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com