
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுக வீரர் கைல் மேயர்ஸின் இரட்டைச் சதத்தால் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 430 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 259 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
171 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தக் கடின இலக்கை நோக்கி அந்த அணி 4-வது இன்னிங்ஸை விளையாடியது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் அறிமுக ஆட்டக்காரர்கள் கைல் மேயர்ஸ் (37 ரன்கள்) மற்றும் நிக்ருமா போனர் (15 ரன்கள்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 5-வது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அறிமுக ஆட்டக்காரர்களாக இருந்தாலும் மேயர்ஸ் மற்றும் போனர் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் உணவு மற்றும் தேநீர் இடைவேளை வரை விக்கெட்டைப் பறிகொடுக்கவில்லை. தேநீர் இடைவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது.
மேயர்ஸ் சதமடித்து 117 ரன்களும், போனர் அரைசதம் அடித்து 79 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால், கடைசி செஷனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 129 ரன்கள் தேவைப்பட்டன. குறைந்தபட்சம் 33 ஓவர்கள் வரை வீசப்படும்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல் ஓவரிலேயே போனர் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.
எனினும், சதமடித்த மேயர்ஸ் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஓவருக்கு ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். அதேசமயம், 303-வது பந்தில் இரட்டைச் சதத்தையும் பூர்த்தி செய்தார்.
128-வது ஓவரில் 1 ரன் எடுத்த மேயர்ஸ் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை உறுதி செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேயர்ஸ் 310 பந்துகளில் 20 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடித்து 210 ரன்கள் குவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆசியாவில் அதிகபட்ச சேஸிங் என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் தன்வசப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.