கடைசி நாளில் 243 ரன்கள் தேவை: வெற்றி பெறுமா தென் ஆப்பிரிக்கா?

​பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாளில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 243 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.
கடைசி நாளில் 243 ரன்கள் தேவை: வெற்றி பெறுமா தென் ஆப்பிரிக்கா?


பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாளில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 243 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 272 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ரிஸ்வான் 28 ரன்களுடனும், ஹசன் அலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹசன் அலி 5 ரன்களுக்கு கேசவ் மகாராஜ் சுழலில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரிஸ்வானுடன் யாசிர் ஷா இணைந்தார். இந்த இணை 8-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் யாசிர் ஷா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஸ்வான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடிய நௌமன் அலி 45 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், இந்த இணை 9-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. கடைசி விக்கெட்டாக ஷஹீன் அப்ரிடி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 298 ரன்களுக்கு ஆட்டமிழந்து 370 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஸ்வான் 115 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜார்ஜ் லிண்டே 5 விக்கெட்டுகளையும், மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களாக எய்டன் மார்கிரம் மற்றும் டீன் எல்கர் களமிறங்கினர். எல்கர் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அப்ரிடி வேகத்தில் வீழ்ந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய வாண்டர் டசன் மற்றும் மார்கிரம் பாட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 4-ம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டு விளையாடினர். மார்கிரம் அரைசதம் அடித்து 59 ரன்களுடனும், வாண்டர் டசன் 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 243 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. பாகிஸ்தானின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவை என்ற நிலை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com