தோல்விக்கான காரணம் என்ன?: விராட் கோலி விளக்கம்

தோல்வியிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும் என்றார். 
தோல்விக்கான காரணம் என்ன?: விராட் கோலி விளக்கம்
Published on
Updated on
1 min read

சென்னை டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி விளக்கியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா,  337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து ஃபாலோ ஆன் வாய்ப்பு வழங்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 420 என்ற கடினமான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 58.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் சென்னை டெஸ்டை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

ஆட்டம் முடிந்த பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

முதல் பாதியில் பந்துவீச்சில் இங்கிலாந்து அணிக்குத் தேவையான அழுத்தத்தை நாங்கள் தரவில்லை என எண்ணுகிறேன். வேகப்பந்து வீச்சாளர்களும் அஸ்வினும் முதல் இன்னிங்ஸில் நன்கு பந்துவீசினார்கள். சில ரன்களைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இங்கிலாந்து அணிக்குப் பாராட்டுகள். முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை எடுத்தார்கள். மிகவும் தொழில்முறையுடன் இங்கிலாந்து அணி விளையாடியது. உங்களுடைய பந்துவீச்சுக் குழு, ஒட்டுமொத்தமாக நன்குப் பங்களித்திருக்க வேண்டும். ஆட்டத்திறனைச் சரியாக வெளிப்படுத்தாததைப் புரிந்துகொள்கிறேன். நாங்கள் எப்போதும் கற்றுக்கொள்ளும் அணியாகவும் உள்ளோம். தோல்வியிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும் என்றார். 

2-வது டெஸ்ட் சென்னையில் பிப்ரவரி 13 அன்று தொடங்குகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com