17 ரன்களில் வங்கதேசம் தோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது மே.இ.தீவுகள்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றுள்ளது.
17 ரன்களில் வங்கதேசம் தோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது மே.இ.தீவுகள்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றுள்ளது.

வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் தாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 409 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது.

113 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 117 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், வங்கதேசத்தின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசத்துக்கு தமிம் இக்பால் மற்றும் சோமியா சர்கார் ஆகியோர் நல்ல தொடக்கம் தந்து 59 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து, சர்கார் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இவரைத் தொடர்ந்து துரிதமாக அரைசதத்தை எட்டிய தமிம் இக்பாலும் ஆட்டமிழந்தார். நஜ்முல் ஹோசைன் 13, முஷ்பிகுர் ரஹிம் 14, முகமது மிதுன் 10, கேப்டன் மோமினுல் ஹக் 26 என சீரான இடைவெளியில் முக்கிய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

இதனால் பின்வரிசை பேட்ஸ்மேன்களாலும் பெரிதளவில் ரன் குவிக்க முடியவில்லை. மெஹதி ஹாசன் மட்டும் கடைசி கட்டத்தில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து சற்று பரபரப்பை உண்டாக்கினார். ஆனால், அவரும் 31 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, வங்கதேச அணி 213 ரன்களுக்கு ஆட்டமிழந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கார்ன்வால் 4 விக்கெட்டுகளையும், வாரிக்கன் மற்றும் பிராத்வைட் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை முறையே மேற்கிந்தியத் தீவுகளின் ரகீம் கார்ன்வால் மற்றும் நிக்ருமா போனர் ஆகியோர் தட்டிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com