
சென்னை ஆடுகளம் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வார்னே இடையே சுட்டுரையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டமும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆடுகளத்தில் முதல் நாளிலிருந்து பந்து திரும்பியதால் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். எனினும் ரோஹித் சர்மா, அஜின்க்யா ரஹானே மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 134 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், இந்திய அணி 195 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனிடையே, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆடுகளத்தை விமரிசித்து சுட்டுரையில் பதிவிட்டார். இதற்கு ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே பதிலளிக்க அது இருவருக்கிடையே வார்த்தைப் போராக மாறியது.
வான் பதிவு:
"எல்லா நேரமும் ஏதேனும் நிகழ்ந்துகொண்டே இருப்பதால் கேளிக்கைக்கு விருந்தளிக்கக்கூடிய கிரிக்கெட்டாக இருக்கலாம். ஆனால், உண்மையில் இந்த ஆடுகளம் அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்தியா சிறப்பாக விளையாடியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது 5 நாள் டெஸ்ட் ஆட்டத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ஆடுகளம் அல்ல."
வார்னே இதற்குப் பதிலளித்துப் பதிவிட்டது:
"இந்த ஆட்டத்தைவிட முதல் ஆட்டத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியம். காரணம் முதல் ஆட்டத்தின் முதல் 2 நாள்களில் ஆடுகளத்தில் பந்துவீச்சுக்கு எவ்வித ஒத்துழைப்பும் இல்லை. இந்த ஆட்டத்தில் முதல் பந்திலிருந்தே பந்து திரும்புகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவை 220 ரன்களுக்கு சுருட்டியிருக்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என ரோஹித் காண்பித்துள்ளார்."
வார்னேவின் கருத்துக்குப் பதிலளித்து வான் பதிவிட்டது:
"பந்து சுழல்கிறது. ஆனால், தற்போது சுழல்வது போல் அல்ல. தற்போது சுழல்வதற்கும் 2 செஷன்கள் சுழன்றதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்ததைப் போல பேட் செய்திருந்தால் முதல் டெஸ்ட் ஆட்டத்தை டிரா செய்திருக்கலாம். இந்த டெஸ்ட் மேட்ச்சுக்கான நல்ல ஆடுகளம் இல்லை."
இந்தக் கருத்துக்கு வார்னே தொடர்ந்து பதிலளித்தது:
"முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி சில நாள்களில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்க ஆரம்பித்தது. இந்தியாவுக்கு வாய்ப்பில்லை என்றபோது ஆடுகளம் குறித்து யாரும் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. இந்த ஆட்டத்தில் குறைந்தபட்சம் இரண்டு அணிகளுக்கும் முதல் பந்திலிருந்தே ஒரே நிலைதான். இங்கிலாந்து மோசமாக பந்துவீசியது. ரோஹித், பந்த் மற்றும் ரஹானே எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் எனக் காண்பித்துள்ளனர்.
பந்து பிட்ச் ஆன பிறகு பாதையில் விலகுவதற்கும், சுழல்வதற்கும் வித்தியாசம் இல்லை. பேட்டுக்கும், பந்துக்கும் இடையே எப்போதும் நியாயமான போட்டி வேண்டும். இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தைவிட இந்தியா சிறப்பாக பேட் செய்துள்ளது, பந்துவீசியுள்ளது. அவ்வளவுதான். முதல் பந்திலிருந்தே இரு அணிகளுக்கும் ஒரே சூழல்தான். ஆனால், இது அதிகப்படியாக பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது."
இதற்கு வான் பதிலளித்துப் பதிவிட்டது:
"அனைத்துக் கோணங்களிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால், முதல் பந்திலிருந்து ஆடுகளம் ஒரே மாதிரி இல்லை. உள்நாட்டில் அணுகூலம் பெற ஆடுகளத்தை எப்படி வேண்டுமோ அப்படி தயாரித்துக் கொள்ளலாம். ஆனால் 5 நாள் டெஸ்ட் ஆட்டத்துக்கு இந்த ஆடுகளம் மோசமானது. நான் இந்திய அணியாக இருந்திருந்தால் இதையேதான் செய்திருப்பேன்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.