இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: 2-ஆவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு பதிலடி

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: 2-ஆவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு பதிலடி

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் கண்ட தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா, 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
482 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி 4-ஆவது நாளில் ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை, அறிமுக வீரர் அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சரிக்க, அஸ்வினும் 3 விக்கெட்டுகள் சாய்த்து அவருக்கு துணை நின்றார். இதனால் 164 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து.
முன்னதாக இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்த இந்தியா, இங்கிலாந்தை 134 ரன்களுக்கு சுருட்டியது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் முன்னிலை பெற்றாலும், 2-ஆவது இன்னிங்ஸிலும் 286 ரன்கள் சேர்த்தது.
சூழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் 482 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 3-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. டேன் லாரன்ஸ், ஜோ ரூட் களத்தில் இருந்தனர்.
முதல் விக்கெட்: 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் இன்னிங்ஸின் 26-ஆவது ஓவரை வீச வந்த அஸ்வினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த உத்வேகத்தில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் அவர். டேன் லாரன்ஸ் கிரீஸைவிட்டு தாண்டிச் சென்று பந்தை திருப்பி ஆட முயல, அவரைக் கடந்து பின்னே சென்ற பந்தைப் பிடித்து ஸ்டம்பிங் செய்தார் பந்த்.
மறுமுனையில் ரூட் நிதானமாக ஆடி வர, லாரன்ஸை அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ், 38-ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டபோது ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த ஆலி போப், 44-ஆவது ஓவரில் பவுண்டரி விளாச முயல, அது இஷாந்த் சர்மா கைகளில் கேட்ச் ஆனது. பின்னர் பென் ஃபோக்ஸ் களம் புகுந்தார்.
வாய்ப்பை தவறவிட்ட இந்தியா: நிதானமாக ரன்கள் சேகரித்து வந்த ஜோ ரூட்டை வீழ்த்தும் வாய்ப்பு 47-ஆவது ஓவரிலேயே கிடைத்தது. அவ்வப்போது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை முயற்சித்து வந்த ரூட், குல்தீப் வீசிய அந்த ஓவரின் 2-ஆவது பந்தில் அவ்வாறு ஒரு ஷாட் அடித்தார். கேட்ச் வாய்ப்பாக வந்த அந்தப் பந்தை சிராஜ் தவறவிட்டார்.
குல்தீப்புக்கு கிடைத்த விக்கெட்: பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இருந்தபோதும் அவருக்கு அவ்வளவாக ஓவர்கள் வழங்கப்படாததாக கருத்துகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தான் சிராஜின் தவறால் ஜோ ரூட்டின் விக்கெட் அவருக்கு கிடைக்காமல் போனது. எனினும் குல்தீப் வீசிய 49-ஆவது ஓவரில் அற்புதமான கேட்ச் மூலம் பென் ஃபோக்ஸ் விக்கெட்டை அவருக்கு பெற்றுத் தந்தார் அக்ஸர் படேல்.
மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 49.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் மொயீன் அலி ஆட வந்தார்.
திருப்புமுனை: ஆட்டத்தின் திருப்பம் 50-ஆவது ஓவரில் நிகழ்ந்தது. அக்ஸர் படேல் வீசிய அந்த ஓவரின் 2-ஆவது பந்தை ரூட் தட்டிவிட முயல, அது ரஹானேவின் கைகளில் கேட்ச் ஆனது. இந்த இடத்திலிருந்தே இந்தியாவின் வெற்றி தொடங்கி விட்டது.
அடுத்து ஆட வந்த ஆலி ஸ்டோன், ரன்கள் எடுக்காமல் டக் அவுட்டானார். பின்னர் ஸ்டூவர் பிராட் களம் காண, கடைசி விக்கெட்டாக வீழ்ந்த மொயீன் அலி, 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என அதிரடி காட்டிச் சென்றார்.

279 - இந்த சேப்பாக்கம் டெஸ்ட் வெற்றிதான், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியா பதிவு செய்த அதிக ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியாகும். இதற்கு முன் 1986-இல் லீட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்தை 279 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது.
246 - இந்த ஆட்டத்தில் கண்ட தோல்வியே, ஆசியாவில் இங்கிலாந்து அணி அடைந்துள்ள அதிக ரன்கள் வித்தியாசத்திலான தோல்வியாகும். இதற்கு முன் 2016-17-இல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியாவிடம் 246 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்ததே அதிகபட்சமாக இருந்தது.
1 - இந்தியாவில் விளையாடிய 8 டெஸ்ட்டுகளில் ஒரு இன்னிங்ஸில் 50 அல்லது அதற்கு அதிகமான ரன்களை ஸ்கோர் செய்யாமல் ஜோ ரூட் ஆட்டமிழப்பது இது முதல் முறையாகும்.

தல் ஆட்டத்தில் சொந்த மண்ணிலேயே ரசிகர்கள் இல்லாமல் விளையாடியது வித்தியாசமாக இருந்தது. ஒரு உந்துதல் இல்லாததாக உணர்ந்தோம்.
2-ஆவது டெஸ்டில் ரசிகர்களுக்கும் முக்கிய பங்குண்டு. சென்னை ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள். கிரிக்கெட்டை மிக அருமையாகப் புரிந்துகொள்கிறார்கள். பெளலர்களுக்கு உத்வேகம் தேவையாக இருக்கும்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி பெளலர்களுக்கு ஆதரவளிக்கக் கூறினேன். அவர்கள் தகுந்த ஆதரவளித்தனர்.
இந்த ஆட்டம் சிறப்பானதாக இருந்தது. ஆடுகளம் இரு அணிகளுக்குமே சவாலாக இருந்தாலும் மன உறுதியுடன் விளையாடி 600 ரன்களை நெருங்கினோம். இரு இன்னிங்ஸ்களிலும் 300 ரன்களை எட்டியதால், உண்மையில் இந்த ஆட்டத்தில் "டாஸ்' தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பந்த் தன்னை நன்றாக மேம்படுத்தியிருந்தார். அக்ஸர் படேலுக்கும் இது சிறப்பான ஆட்டமாக இருந்தது. அஸ்வின் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவருடனான எனது கூட்டணி திருப்புமுனையாக அமைந்தது. ஆமதாபாத் ஆட்டம் நிச்சயம் சவாலாக இருக்கும்.
- விராட் கோலி (இந்திய கேப்டன்)

ட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே இந்தியா எங்களை வீழ்த்திவிட்டது. இதுபோன்ற ஆடுகளங்களில் எவ்வாறு ஸ்கோர் செய்ய வேண்டும் என்று இந்த ஆட்டத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம். பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் நாங்கள் பந்துவீச வேண்டியுள்ளது. தொடர் இப்போது சமனில் உள்ளது, அடுத்த இரு ஆட்டங்களுக்கு தூண்டுதல் அளிப்பதாக இருக்கிறது. ஆட்டத்தின் போக்கில் மொயீன் அலி சிறப்பாக விளையாடினார். பென் ஃபோக்ஸ் முதல் இன்னிங்ஸில் அருமையாக விளையாடினார். அடுத்த இரு ஆட்டங்ளை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம். அணியில் பல வீரர்கள் ஆசிய கண்டத்தில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். அவர்களும் விரைவில் இங்குள்ள ஆடுகளங்களின் தன்மையை அறிந்துகொண்டு விளையாடத் தொடங்குவார்கள். குறுகிய காலகட்டத்தில் அவ்வாறு கற்றுக்கொண்டு மீண்டு வந்த அனுபவம் ஏற்கெனவே எங்களுக்கு உள்ளது.
-ஜோ ரூட் (இங்கிலாந்து கேப்டன்)

"ரசிகர்களுக்கு சமர்ப்பணம்'
ஆட்டநாயகன் விருது வென்ற அஸ்வின் சென்னை ரசிகர்களுக்காக தமிழில் பேசியபோது, "சேப்பாக்கம் மைதானத்தில் நான் விளையாடுவேனா என சிறு வயதில் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இதே மைதானத்துக்கு எனது தந்தையுடன் டெஸ்ட் கிரிக்கெட் பார்க்க வந்திருக்கிறேன். அப்போது விளையாடிய வீரர்களை ஆவலுடன் பார்த்திருக்கிறேன். தற்போது நானே இங்கு விளையாடுவதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதுவரை சென்னையில் 4 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியிருந்தாலும், நிச்சயம் இதுவே எனக்கு நினைவில் நிற்கும் டெஸ்ட்டாகும். ரசிகர்கள் அளித்த ஆதரவில் ஒரு நாயகன் போல இங்கு உணர்ந்தேன். கரோனா சூழலிலும் அதிகமான ரசிகர்கள் தைரியத்துடன் மைதானத்தில் கூடி ஆதரவளித்தனர். இந்த ஆட்டத்தில் நான் எட்டிய சிறப்புகளை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லாதபோது இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. அவர்கள் வந்த பிறகு தொடரை சமன் செய்துள்ளோம். ஆமதாபாதிலும் ரசிகர்கள் வருவார்கள் என்பதால் நிச்சயம் இதே உத்வேகத்துடன் விளையாடுவோம்' என்றார்.

தோனியின் சாதனை: சமன் செய்த கோலி
சேப்பாக்கம் டெஸ்ட் வெற்றி, கோலி தலைமையிலான இந்திய அணிக்கு 21-ஆவது வெற்றியாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு 21 வெற்றிகளை பெற்றுத்தந்த 2-ஆவது கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். அந்த எண்ணிக்கையிலான வெற்றிகளை ஏற்கெனவே தோனி தலைமையில் இந்திய அணி பதிவு செய்துள்ளது.
சொந்த மண்ணில் கோலி தலைமையில் இதுவரை 28 டெஸ்டுகளில் விளையாடியுள்ள இந்தியா, வெற்றிகள் தவிர்த்து 2 தோல்விகளை கண்டதுடன், 5 ஆட்டங்களை டிரா செய்துள்ளது. தோனி தலைமையிலான இந்திய அணி மொத்தம் 30 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், வெற்றிகள் தவிர்த்து 3 தோல்விகளையும், 6 டிராவையும் பதிவு செய்துள்ளது.

3-ஆவது டெஸ்டில் பேர்ஸ்டோ, மார்க் வுட்
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் மொயீன் அலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஜானி பேர்ஸ்டோ, மார்க் வுட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையில் அலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 3-ஆவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக ஆமதாபாதில் வரும் 24-ஆம் தேதி முதல் விளையாடப்படவுள்ளது.
அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, டொமினிக் பெஸ், ஸ்டுவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாக் கிராவ்லி, பென் ஃபோக்ஸ், டேனியல் லாரன்ஸ், ஜேக் லீச், ஆலி போப், டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

கில்லுக்கு லேசான காயம்
3-ஆம் நாள் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது ஷுப்மன் கில்லுக்கு இடதுகையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காயத்தை ஸ்கேன் செய்து, பிசிசிஐ மருத்துவக் குழுவினர் காயத்தின் தன்மையை ஆராய்ந்து வருகின்றனர். இதனால் கில் 4-ஆவது நாள் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்யவில்லை. அவருக்குப் பதில் மயங்க் அகர்வால் ஃபீல்டிங் செய்தார்.

2-ஆவது இடத்தில் இந்தியா
இந்த வெற்றியால் இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. இந்தியா 69.7 புள்ளிகள் சதவீதத்துடன் அந்த இடத்தில் இருக்க, ஆஸ்திரேலியா (69.2) மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்து (67) நான்காம் இடத்திலும் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற, இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா இன்னும் ஒரு வெற்றியை பதிவு செய்வதுடன், ஒரு ஆட்டத்தை டிராவாவது செய்ய வேண்டும்.
இதனிடையே, 2-ஆவது டெஸ்டுக்கான ஆடுகளம் மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த விவகாரத்தில் இந்திய அணிக்கு அபராதமாக 3 புள்ளிகள் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் வாய்ப்பை இந்தியா இழக்கும் அபாயம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com