ஆஸி. ஓபன்: செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஒசாகா!

இதனால் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்காக செரீனா வில்லியம்ஸ் மேலும் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
ஆஸி. ஓபன்: செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஒசாகா!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் ஒசாகா, செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதிச்சுற்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டார் உலகின் நெ.3 வீராங்கனையான ஒசாகா. ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் 6-3, 6-4 என நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தி ஆஸி. ஓபன் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ஒசாகா. இதன்மூலம் நான்காவது தடவையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

இதனால் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்காக செரீனா வில்லியம்ஸ் மேலும் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-ல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

2017-ம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்துகொண்டார் செரீனா வில்லியம்ஸ். அதே ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். எனினும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆனார். இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. 

இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா. ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

கடைசி நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோற்றுள்ளார் செரீனா. கடந்த வருடம் நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார். காயத்தால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல் சுற்றுக்குப் பிறகு வெளியேறினார். இதனால் அவர் எப்போது 24-வது பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

அடுத்த கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன், மே 24 முதல் தொடங்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com