அதிரடியாக விளையாடி 99* ரன்கள் எடுத்த கான்வே: ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்திய நியூசிலாந்து!

இடது கை பேட்ஸ்மேனான கான்வே இன்றைய டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டதோடு...
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை எளிதாக வென்றுள்ளது நியூசிலாந்து அணி.

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் கிறைஸ்டர்ச்சரில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

கப்தில் ரன் எதுவும் எடுக்காமலும் டிம் சைஃபர்ட் 1 ரன்னிலும் கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் 4 ஓவர்களுக்குள் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து அணி.

எனினும் டெவோன் கான்வேயின் அதிரடி ஆட்டம் பெரிய திருப்பத்தை உண்டுபண்ணியது. 36 பந்துகளில் அரை சதமெடுத்த கான்வே, அதன்பிறகு மேலும் விரைவாக ரன்கள் குவித்தார். கடைசி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் கான்வே. கிளென் பிளிப்ஸ் 30 ரன்களும் நீஷம் 20 ரன்களும் எடுத்தார்கள். 

29 வயது டெவோன் கான்வே இதற்கு முன்பு வரை 6 டி20 ஆட்டங்களில் விளையாடி இரு அரை சதங்கள் எடுத்துள்ளார். இன்று அவருக்கு மகத்தான நாளாக அமைந்துவிட்டது. இடது கை பேட்ஸ்மேனான கான்வே இன்றைய டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டதோடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கடினமான இலக்கை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி, 17.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்செல் மார்ஷ், அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்தின் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கான்வே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

53 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 ஆட்டத்தை வென்ற நியூசிலாந்து அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டி20 ஆட்டம், பிப். 25 அன்று நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com