பகலிரவு டெஸ்டில் இந்திய அணியின் பேட்டிங் எப்படி இருக்கும்?: விராட் கோலி பதில்

இதற்கு முன்பு விளையாடிய கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் இதை உணர்ந்தோம்...
பகலிரவு டெஸ்டில் இந்திய அணியின் பேட்டிங் எப்படி இருக்கும்?: விராட் கோலி பதில்

அடிலெய்ட் பகலிரவு டெஸ்டில் விளையாடியது போல மோசமாக விளையாட மாட்டோம். அந்தத் தோல்வியால் இந்திய அணி மனத்தளவில் பாதிக்கப்படவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் 3-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100-வது டெஸ்டை நாளை விளையாடவுள்ளார். 

பகலிரவு டெஸ்ட் பற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

இரு அணிகளும் இதற்கு முந்தைய பகலிரவு டெஸ்டில் மோசமாக பேட்டிங் செய்துள்ளோம். அதேபோல மீண்டும் மோசமாக விளையாட மாட்டோம். இங்கிலாந்து அணியினரிடம் கேட்டாலும் முந்தைய பகலிரவு டெஸ்ட் போல 58 ரன்களில் ஆட்டமிழக்க மாட்டோம் என்றுதான் அவர்கள் பதில் அளிப்பார்கள். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் நாங்கள் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தப் பகலிரவு டெஸ்டில் தாக்கத்தை ஏற்படுத்தாது. சில குறிப்பிட்ட நாள்களில் சில விஷயங்கள் நடந்துவிடும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அடிலெய்டில் அந்த 45 நிமிடங்கள் தவிர மற்ற நேரங்களில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். அடிலெய்ட் டெஸ்டுக்குப் பிறகு நாங்கள் மெல்போர்னில் வென்றோம். எனவே அதனால் நாங்கள் மனத்தளவில் பாதிக்கப்படவில்லை. 

பிங்க் பந்தில் விளையாடுவது சவாலானது. இதற்கு முன்பு விளையாடிய கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் இதை உணர்ந்தோம். ஆமதாபாத் ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும். அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர்களை இந்த டெஸ்டில் தவிர்க்க முடியாது. புதிய பந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உதவும். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை மனத்தில் நினைத்துக்கொண்டு இந்த டெஸ்டில் விளையாட முடியாது. அடுத்த இரு டெஸ்டுகளையும் வெல்லவே விரும்புகிறோம். தற்போதைக்கு நாளைய டெஸ்ட் ஆட்டத்துக்குத் தயாராகிறோம். அடுத்த 5 நாள்களுக்கு உழைக்கவேண்டும். பிறகு அடுத்த டெஸ்டுக்கு நகரவேண்டும். ஒரேடியாக (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக) எதிர்காலம் குறித்து யோசிக்க முடியாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com