அக்சர் 6 விக்கெட்டுகள்: 112 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து

​இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
அக்சர் 6 விக்கெட்டுகள்: 112 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து


இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக ஆமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக டோம் சிப்லே மற்றும் ஸாக் கிராலே களமிறங்கினர். 100-வது டெஸ்டில் களமிறங்கும் இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டாக சிப்லேவை (0) வீழ்த்தினார். இன்னிங்ஸின் 7-வது ஓவரிலேயே சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தினார் கேப்டன் விராட் கோலி.

இதற்குப் பலனளிக்கும் வகையில் முதல் பந்திலேயே பேர்ஸ்டோவ் (0) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரூட் 17 ரன்களுக்கு அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். இதுவரை பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி அரைசதம் அடித்த கிராலே 53 ரன்களுக்கு கிராலோ சுழலில் வீழ்ந்தார்.

முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்தியப் பந்துவீச்சாளர்கள் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். இடைவேளைக்குப் பிறகு முதல் ஓவரிலேயே ஆலி போப் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார்.

அடுத்த ஓவரில் ஸ்டோக்ஸ் விக்கெட்டை அக்சர் கைப்பற்றினார். 2 பவுண்டரிகள் அடித்து விளையாடி வந்த ஆர்ச்சரை அக்சர் போல்டாக்கினார். ஜேக் லீச்சை (3) அஸ்வின் காலி செய்தார்.

இதனால், அந்த அணி 100 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதன்பிறகு, அக்சர் ஓவரில் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்த பிராட் பூம்ராவிடம் கேட்ச் ஆனார். இது அக்சர் படேலின் 5-வது விக்கெட்.

கடைசி விக்கெட்டாக பென் ஃபோக்ஸையும் அக்சர் படேலே வீழ்த்தினார்.

இதன்மூலம், அந்த அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்திய அணித் தரப்பில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com