ரிஷப் பந்துக்குக் காயம், விக்கெட் கீப்பராகச் செயல்படும் சஹா: ஐசிசி விதிமுறைகள் சொல்வது என்ன?

ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விக்கெட் கீப்பராக சஹா செயல்படுகிறார்.
ரிஷப் பந்துக்குக் காயம், விக்கெட் கீப்பராகச் செயல்படும் சஹா: ஐசிசி விதிமுறைகள் சொல்வது என்ன?
Published on
Updated on
2 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விக்கெட் கீப்பராக சஹா செயல்படுகிறார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. மிகச்சிறப்பாக விளையாடிய ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆகி, கடைசியாக ஆட்டமிழந்தார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி இன்று மிகவும் சுமாராக விளையாடி, 100.4 ஓவர்கள் விளையாடி, 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கில், புஜாரா தலா 50 ரன்கள் எடுத்தார்கள். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் விஹாரி, அஸ்வின், பும்ரா ஆகிய மூவரும் ரன் அவுட் ஆனதால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறியுள்ளது. 

இந்நிலையில் பேட்டிங் செய்தபோது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டது. முழங்கையில் காயம் ஏற்பட்டதால் வலி தாங்காமல் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்ஸில் அவர் களமிறங்கவில்லை. ரிஷப் பந்துக்குப் பதிலாக சஹா விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார்.

ஒரு வீரருக்குத் தலையில் அடிபட்டால் மட்டுமே மாற்று வீரரைக் களமிறக்க முடியும். அந்த வீரரால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்கேற்க முடியும். ஆனால் காயம் காரணமாக வெளியேறும் விக்கெட் கீப்பருக்குப் பதிலாகக் களமிறங்கும் மற்றொரு விக்கெட் கீப்பரால் பேட்டிங் செய்ய முடியாது. இதனால் விக்கெட் கீப்பராக சஹா செயல்பட்டாலும் இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸில் அவரால் பேட்டிங் செய்ய முடியாது. ரிஷப் பந்த் தான் பேட்டிங் விளையாட களமிறங்க வேண்டும். எனினும் காயம் காரணமாக 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பந்தால் பேட்டிங் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

1980 முதல் 2017 வரை மாற்று வீரரால் விக்கெட் கீப்பராகச் செயல்பட முடியாது. எனினும் கடந்த மூன்று வருடங்களாக மாற்று விக்கெட் கீப்பரையும் ஐசிசி அனுமதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com