சிட்னி டெஸ்டை டிரா செய்ய இந்திய அணி கடுமையாகப் போராட்டம்: 115 ஓவர்கள் விளையாடி 300/5 ரன்கள்!

கடைசி ஒரு மணி நேரத்தில் என்ன நடக்கும், இந்திய அணி சிட்னி டெஸ்டை டிரா செய்யுமா...
அஸ்வின்
அஸ்வின்

சிட்னி டெஸ்டை டிரா செய்து தோல்வியிலிருந்து தப்பிப்பதற்காக இந்திய அணியினர் கடுமையாகப் போராடி வருகிறார்கள். கடைசி நாளில் இன்னும் 17 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இதுவரை 115 ஓவர்கள் விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. இந்திய அணியினரின் இந்தக் கடுமையான போராட்டத்துக்கு ரசிகர்களின் பலத்த பாராட்டு கிடைத்துள்ளது.

சிட்னியில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. இந்திய அணிக்கு 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் இந்தியா 34 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. புஜாரா 9 , ரஹானே 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

5-ம் நாளில் இந்திய அணி கடுமையாகப் போராடி வருகிறது. தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 96 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. ரஹானே 4 ரன்களில் வீழ்ந்த பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார். 118 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார். 205 பந்துகள் எதிர்கொண்டு 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி வெற்றி பெற 127 ரன்கள் தேவை. 5 விக்கெட்டுகள் மீதமுள்ளன. விஹாரி 4, அஸ்வின் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 5-வது நாளின் கடைசிப் பகுதியில் வெற்றி, தோல்வி, டிரா என மூன்று முடிவுகளும் சாத்தியம் என்பதால் பரபரப்பான கட்டத்தை நெருங்கியது சிட்னி டெஸ்ட்.  

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

தேநீர் இடைவேளைக்குப் பிறகு வெற்றி சாத்தியம் இல்லை என்பதால் விஹாரியும் அஸ்வினும் டிராவுக்காக விளையாடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணியினர் தொடந்து பவுன்சர் பந்துகளை வீசியதால் பலமுறை இந்திய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. எனினும் அதைப் பொருட்படுத்தாமல் தோல்வியடையக் கூடாது என்பதற்காக விஹாரியும் அஸ்வினும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு தங்களுடைய விக்கெட்டைக் காப்பாற்றி வருகிறார்கள். இந்திய அணியினரின் இந்தப் போராட்டமும் விடாமுயற்சியும் இந்திய ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 115 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. விஹாரி 106 பந்துகளில் 7 ரன்களும் அஸ்வின் 85 பந்துகளில் 24 ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார்கள். இன்னும் 17 ஓவர்கள் மீதமுள்ளன. 

கடைசி ஒரு மணி நேரத்தில் என்ன நடக்கும், இந்திய அணி சிட்னி டெஸ்டை டிரா செய்யுமா அல்லது ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா என்கிற பரபரப்பில் உள்ளார்கள் ரசிகர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com