ஷுப்மன் கில் 91, புஜாரா 43* ரன்கள்: இந்திய அணி தேநீர் இடைவேளையின்போது 183/3

37 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி கிடைக்கும்....
ஷுப்மன் கில் 91, புஜாரா 43* ரன்கள்: இந்திய அணி தேநீர் இடைவேளையின்போது 183/3

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 5-ம் நாள்  தேநீர் இடைவேளையின்போது, 63 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று, ரோஹித் சர்மா 7 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு புஜாராவும் ஷுப்மன் கில்லும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். கில் விரைவாக ரன்கள் எடுக்க, தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் ஆஸி. பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார் புஜாரா. 90 பந்துகளில் அரை சதமெடுத்த ஷுப்மன் கில், சதம் அடிப்பார் என்கிற நம்பிக்கையை உருவாக்கினார். எனினும் 146 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் விரைவாக ரன்கள் எடுக்க முயன்றார். 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

5-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 63 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. 168 பந்துகளில் 43 ரன்களுடன் புஜாராவும் 23 பந்துகளில் 10 ரன்களுடன் ரிஷப் பந்தும் களத்தில் உள்ளார்கள்.

கடைசிப் பகுதியில் இந்திய அணி 37 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி கிடைக்கும். அல்லது 7 விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் டிரா கிடைக்கும். என்ன நடக்கப் போகிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com