விம்பிள்டனில் தோற்றதால் விரைவில் ஓய்வு அறிவிப்பா?: ஃபெடரர் பதில்

100 சதவீத ரசிகர்களை அரங்கில் பார்த்ததில் மகிழ்ச்சி. ஆனால் நேர் செட்களில் நான் தோற்றதையே அவர்கள் பார்க்க நேர்ந்தது...
விம்பிள்டனில் தோற்றதால் விரைவில் ஓய்வு அறிவிப்பா?: ஃபெடரர் பதில்

விம்பிள்டன் காலிறுதியில் தோல்வியடைந்தாலும் தற்போதைக்கு ஓய்வு பெற மாட்டேன் என பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் கூறியுள்ளார்.

விம்பிள்டன் போட்டியில் பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

விம்பிள்டன் பட்டத்தை எட்டு முறை வென்றுள்ள ஃபெடரர் காலிறுதியில் போலந்தைச் சேர்ந்த ஹுபர்ட் ஹர்கஸை எதிர்கொண்டார். எதிர்பாராதவிதமாக 3-6, 6-7(4), 0-6 என்கிற நேர் செட்களில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஃபெடரர். 

கடைசியாக 2018 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார் ஃபெடரர். அதன்பிறகு அவரால் மற்றுமொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியாத நிலைமையே உள்ளது. விம்பிள்டன் போட்டியில் 3-வது முறையாக நேர் செட்களில் தோல்வியடைந்துள்ளார். கடைசியாக 2002-ல் தான் இதுபோன்ற ஒரு தோல்வியை எதிர்கொண்டார். விம்பிள்டனில் முதல்முறையாக ஒரு செட்டில் 0-6 எனத் தோற்றுள்ளார் ஃபெடரர். 

மோசமான தோல்வியால் ஃபெடரரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள். விம்பிள்டனில் ஃபெடரரை இன்னொருமுறை காண வாய்ப்பு கிடைக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்தத் தோல்வியால் விரைவில் ஓய்வு பெற்று விடுவீர்களா எனச் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஃபெடரர் கூறியதாவது:

இதைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். காயத்திலிருந்து மீண்டு வரும்போது உங்களுக்கென்று ஒரு லட்சியம் இருக்கவேண்டும். உடனடியாக மலையேறி விட முடியாது. படிகளைக் கடக்க வேண்டும். விம்பிள்டன் முதல் பெரிய படி. அது தற்போது முடிந்துவிட்டது. என்ன நடந்தது என அலசவேண்டும். உடலும் காயமும் மனநிலையும் எப்படி இருந்தது எனப் பார்க்கவேண்டும். எனக்கான போராட்டம் இது. கடினமாக இருக்கும் எனத் தெரியும். என் குழுவினரிடம் நான் பேசவேண்டும். சில காலம் காத்திருக்கவேண்டும். மற்றவர்களால் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டோமோ என எண்ணக்கூடாது. சிறிது காத்திருந்து, எடுக்கவேண்டிய முடிவு யோசிக்க வேண்டும். தொடர்ந்து விளையாடுவது தான் என் லட்சியம். 

இதுதான் விம்பிள்டனில் நான் விளையாடிய கடைசி ஆட்டமா எனக் கேட்கிறீர்கள். எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இன்னொரு விம்பிள்டனில் விளையாட வேண்டும் என எண்ணுகிறேன். மீண்டும் விளையாட வேண்டும். ஆனால் என் வயதில் என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது. 100 சதவீத ரசிகர்களை அரங்கில் பார்த்ததில் மகிழ்ச்சி. ஆனால் நேர் செட்களில் நான் தோற்றதையே அவர்கள் பார்க்க நேர்ந்தது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com