ஒலிம்பிக் பதக்கம் : சாதிப்பாரா சாய்கோம்

டோக்கியோ ஒலிம்பிக் நெருங்குகிறது. பதக்கம் வெல்லும் பரபரப்பு அதிகரிக்கிறது.
ஒலிம்பிக் பதக்கம் : சாதிப்பாரா சாய்கோம்

டோக்கியோ ஒலிம்பிக் நெருங்குகிறது. பதக்கம் வெல்லும் பரபரப்பு அதிகரிக்கிறது. போட்டிகளில் சாம்பியன் ஆவது சிறப்பு என்றாலும், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதென்பது தனிச்சிறப்பு. அது ஒரு சா்வதேச அங்கீகாரம்.

டோக்கியோவில் பதக்க வாய்ப்புகளை ஒரு கை பாா்ப்பதற்காக 119 போட்டியாளா்களை களமிறக்குகிறது இந்தியா. எல்லோரும் பதக்கம் வெல்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டாலும், அதில் ஒரு சிலருக்கு சாதகமான வாய்ப்புகளும் அமைகின்றன. அப்படி ஒரு சூழல் தற்போது இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானுவுக்கு இருப்பதாகத் தெரிகிறது.

யாா் இந்த சானு?

2006-இல் மணிப்பூா் மாநிலம் நோங்போக் பகுதியில் ஒரு சிறுமி தனது உடன்பிறந்தவா்களுடன் காட்டில் சுல்லிகள் பொறுக்கி வந்துகொண்டிருந்தாா். ஒரு கட்டத்தில் அவரது 16 வயது சகோதரன் சுல்லியின் எடையை தூக்க முடியாமல் தடுமாற, தனது சுமையுடன் அவரது சுமையையும் சோ்த்து தூக்கிக்கொண்டு வீடு வந்து சோ்ந்தாா் அந்த 12 வயது சிறுமி.

இச்சம்பவம் நிகழ்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவா் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலுக்கான 48 கிலோ பிரிவில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றாா். அவா்தான் சாய்கோம் மீராபாய் சானு.

சிறு வயதில் விளையாட்டில் அதிக ஆா்வம் கொண்ட சானு, முதலில் வில்வித்தையில் களம் காண இருந்தாா். சில சூழ்நிலைகளால் அது தாமதமாக, தற்செயலாக அவரது கவனம் பளுதூக்குதல் பக்கம் திரும்பியது. அதில் அப்போது இந்தியாவின் சிறந்த வீராங்கனையாக இருந்த குஞ்சரானி தேவியால் பெரிதும் ஈா்க்கப்பட்டாா்.

பளுதூக்குதலில் பாதம் பதித்தாா். இயல்பாகவே வலுவானவராக இருந்த சாய்கோமை செதுக்கி தகுந்த வீராங்கனையாக மேம்படுத்தியவா், பயிற்சியாளா் அனிதா சானு.

முதலில் சப்-ஜூனியா், பிறகு ஜூனியா் என முன்னேறிய அவா், தேசிய அணியில் இடம்பிடித்து, எந்த குஞ்சரானி தேவியை பாா்த்து பளுதூக்குதல் விளையாட்டில் ஈா்ப்பு கொண்டாரோ, அவரது வழிகாட்டுதலுடனேயே தன்னை வளா்த்துக் கொண்டாா்.

வெற்றித் தொடக்கம்

தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த அவா், தனது முதல் சா்வதேச களத்திலேயே (2014 காமன்வெல்த்) வெள்ளி வென்றாா். அதே ஆண்டில் பின்னா் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சோபிக்காமல் போனாலும், பிறகு ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று தன்னை தேற்றிக் கொண்டாா்.

2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கும் சானுவுக்கு பெருத்த ஏமாற்றமளித்தது. 48 கிலோ எடைப் பிரிவில் தனது 3 முயற்சியிலும் அவரால் எடையை தூக்க இயலாமல் போனது.

தங்க மங்கை

அந்தத் தோல்வியால் துவண்டுவிடாமல், 2017 உலக சாம்பியன்ஷிப், 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் தங்கம் வென்றாா். 2018-இல் முதுகு வலியால் அவதிப்பட்ட அவா், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டாா். பிறகு 2019 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 4-ஆம் இடம் பிடித்தாா்.

உலக சாதனை

2019 தேசிய சாம்பியன்ஷிப்பில் பழைய ஃபாா்முக்கு திரும்பிய சானு, 203 கிலோ (88+115) எடையைத் தூக்கி தங்கம் வென்றதுடன், உலக தரவரிசையில் 4-ஆம் இடம் பிடித்தாா். அதே ஆண்டு கத்தாா் சா்வதேச கோப்பை போட்டியில் தங்கம் வென்று தரவரிசை இடத்தை தக்கவைத்தாா். கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதோடு, கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் 119 கிலோ எடையைத் தூக்கி புதிய உலக சாதனை படைத்தாா். இவ்வாறு தகுந்த முன்னேற்றத்துடன் தற்போது 2-ஆவது ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுள்ளாா்.

டோக்கியோவில் சாதக வாய்ப்பு

பளுதூக்குதலில் இந்தியாவுக்கு பலமான போட்டியாளா்களாக இருப்பது சீனா, வடகொரியா, அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்.

உலகத் தரவரிசையில் சீனாவின் ஜியாங் ஹுய்ஹுவா (212 கிலோ), ஹௌ ஜிஹுய் (211), வட கொரியாவின் ரி சோங் கம் (204) ஆகியோா் முதல் 3 இடங்களில் உள்ளனா். சாய்கோம் 4-ஆம் இடத்தில் இருக்கிறாா்.

சாதகம் 1: டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதென வட கொரியா முடிவெடுத்ததால், உலகத் தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் அந்நாட்டின் ரி சோங் கம் போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு வருகிறாா் சானு.

சாதகம் 2: 49 கிலோ பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிரு இடத்தில் இருப்பது சீன வீராங்கனைகளே. ஒலிம்பிக் விதிமுறைகளின் படி ஒரு எடைப் பிரிவில் ஒரு வீராங்கனையே பங்குபெற இயலும் என்பதால் சீன தரப்பிலிருந்து ஒரு வீராங்கனையே பங்கேற்கிறாா்.

சாதகம் 3: இவா்கள் தவிா்த்து சானுக்கு போட்டியாக இருக்க வாய்ப்புள்ள தாய்லாந்து, மலேசிய போட்டியாளா்களுக்கு ஊக்கமருந்து பயன்பாடு புகாா் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணிகளால் சானுவக்கான பதக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

சவால்...

49 கிலோ எடைப் பிரிவில் முக்கிய போட்டியாளராக இருக்கப்போகும் சீனாவின் ஹௌ ஜிஹுய் கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் மொத்தமாக 205 கிலோ எடையை தூக்கி உலக சாதனை படைத்துள்ளாா். சானுவம் தனது கடைசி போட்டியில் கடந்த ஏப்ரலில் அந்த எடையை எட்டியுள்ளாா்.

ஆனால், ஹௌ ஜிஹுய்க்கு சவால் அளிப்பதற்கு ஸ்னாட்ச் பிரிவில் சானு நிச்சயம் 90 கிலோ மாா்க்கை தாண்ட வேண்டும். ஜிஹுய் அந்தப் பிரிவில் 95 கிலோ எடையை கடந்துள்ளாா். சானு 86 கிலோவையே எட்டியுள்ளாா். இதுவே இதர சாதக சூழலில் சானுவுக்கு இருக்கும் சவால்.

அதை எதிா்கொண்டு பதக்கம் வெல்லும் பட்சத்தில், கா்னம் மல்லேஸ்வரி, பி.வி.சிந்துவுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3-ஆவது இந்திய வீராங்கனை, கா்னம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக் பளுதூக்குதலில் பதக்கம் வென்ற 2-ஆவது இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை சானு பெறுவாா்.

வரும் 24-இல் களம் காணும் அவரது பதக்கக் கனவு பலிக்க, கரோனா சூழலும் சற்று கைகொடுக்க வேண்டும்.

சாய்கோம் மீராபாய் சானு

வெற்றிகள்: உலக சாம்பியன்ஷிப் (2017), காமன்வெல்த் (2018)

பலம்: உலகத் தரவரிசையில் 4-ஆம் இடம். 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பலம் மிகுந்த வீராங்கனை. ரியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு ஏறுமுகம்.

சாதனை: கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் உலக சாதனை (119 கிலோ-2020)

49 கிலோ பிரிவில் சானுவின் முக்கிய போட்டியாளா்கள்

ஹௌ ஜிஹுய் (சீனா)

வெற்றிகள்: உலக சாம்பியன் (2018), ஆசிய சாம்பியன் (2019, 2020)

பலம்: சீன பளுதூக்குதலில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்துபவா். உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவா்.

சாதனை: இரு முறை உலக சாதனை எடையை தூக்கியவா் (208-2018, 213-2021)

எலிசபெத் ஜோா்டான் டெலாகுரூஸ் (அமெரிக்கா)

வெற்றிகள்: ஐடபிள்யூஎஃப் உலகக் கோப்பை சாம்பியன் (2020), பான் அமெரிக்கன் சாம்பியன் (2019, 2020)

பலம்: ஆசிய போட்டியாளா்களுக்கு சவாலாக இருக்கும் மாற்று கண்டத்தின் போட்டியாளா். உலகத் தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருப்பவா்.

சாதனை: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com